‘வானம் கொட்டட்டும்’ – தாமரை இலை நீர் போல 3/5

‘வானம் கொட்டட்டும்’ – தாமரை இலை நீர் போல

அண்ணன் பாலாஜி சக்திவேலை வெட்டியதற்காக இரண்டு கொலைகளை செய்துவிட்டு சிறைச்சாலை செல்கிறார் சரத்குமார். இரண்டு பிள்ளைகளுடன் ஊரை விட்டு சென்னைக்கு வந்து வேலை செய்து பிள்ளைகளை காப்பாற்றுகிறார் ராதிகா. அவ்வப்போது வந்து பார்க்கும் பாலாஜி சக்திவேலிடம் கோபத்தை காட்டுகிறார் ராதிகா. சரத்குமார் – ராதிகா பிள்ளைகளான விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அப்பாவின் மீது வெறுப்போடு வளர்கிறார்கள். அதேசமயம் விக்ரம் பிரபு கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைக்காய் வியாபாரம் செய்யத் துவங்குகிறார். அதற்கு உதவி புரிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வீட்டை விட்டு ஓடிப்போன அப்பாவின் கடனுக்கு பொறுப்பேற்கிறார் மடோனா செபாஸ்டியன். சிறுவயது முதல் ஒன்றாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷிடம் தன் காதலை சொல்ல தயங்குகிறார் சாந்தனு. தன் அப்பாவை கொன்றதற்காக சரத்குமாரை பழிவாங்க காத்திருக்கிறார் நந்தா. இந்நிலையில், சரத்குமார் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி வருகிறார்.

விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சரத்குமாரை ஏற்றுக் கொண்டார்களா? நந்தா சரத்குமாரைப் பழிவாங்கினாரா? இதற்கிடையே இளசுகளுக்குள் நடக்கும் காதல், மோதல் போன்றவை தான் ‘வானம் கொட்டட்டும்’.

சரத்குமார் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அத்தோடு தன் கதாபாத்திரத்தை நிலைநிறுத்தும் விதமாக தெளிந்த நீரோட்டமாக சீரான நடிப்பை கதாபாத்திரத்தோடு பிரித்து பார்க்க இயலாமல் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பல வருடங்கள் சிறையில் இருந்து விடுதலையாகி முதன் முறையாக தன் பிள்ளைகளை பார்க்கும் போதும், தன் மனைவியை தொட்டுத் பேசலாமா என்று தெரியவில்லை என கேட்கும் போதும் அனைவரின் மனதும் கரைந்து விடுகிறது.

ராதிகா நடித்து இருக்கிறாரா? அல்லது கதாபாத்திரத்தோடு கூடு விட்டுக் கூடு பாய்ந்தாரா? என்பது தெரியாத அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். கணவன் கொலை செய்துவிட்டு சிறைச்சாலை சென்ற பின்பு பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று வைராக்கியத்தோடு ஊரைவிட்டு வரும்போதும், தன் கணவன் விடுதலையாகி வந்த போது தோள்மீது சாயும் போதும், பிள்ளைகளுக்கும் கணவருக்கும் இடையே தவிக்கும் போதும், இந்த நடிப்பை தன்னைவிட யாரும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது என்று நிரூபித்திருக்கிறார்.

விக்ரம் பிரபு அம்மாவிற்கு அடங்காத பிள்ளையாகவும், தங்கையை கண்டிக்கும் பொறுப்புள்ள அண்ணனாகவும், அதேசமயம் வியாபாரத்தில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும் என்ற முயற்சியிலும், தன் காதலை மடோனாவிடம் வெளிப்படுத்தும் காட்சியிலும் மதிப்பெண் பெறுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் துடிப்பான இளம் பெண்ணாக, சட்டக் கல்லூரி மாணவியாக, அண்ணனுடன் வியாபாரத்தில் பங்குதாரராக அசத்தியிருக்கிறார்.

மடோனா செபாஸ்டியன் கோடீஸ்வர பெண் என்ற கர்வம் குறையாமல் நடித்திருக்கிறார். சாந்தனு அமைதியாக வந்து போகிறார்.

இயக்கமும் வசனமும் நன்றாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறை இருப்பது போல தோன்றுகிறது. தனா இன்னும் சிறிது கவனத்துடன் இருந்திருக்கலாம். பின்னணி இசை படத்திற்கு தூண்களாக அமைந்திருக்க, பக்கபலமாக ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.

கதையில் தெளிவு இருந்தாலும் இயக்கம் தனா பாணியிலும், வசனம் மணிரத்தினம் பாணியிலும் இருப்பதால் ‘தாமரை இலையில் நீர் போல’ கதையின் உணர்வோடு ஒன்றவில்லை.

– ஹேமா

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *