1986 ஆம் ஆண்டில் திரைப்பட களம். திருவிழாவில் தனக்கு பிடித்த பொம்மை ஒன்றை மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தன் அப்பா அம்மாவிடம் அழுது அடம் பிடித்து வாங்கிக் கொள்கிறான். எப்பொழுதும் அதை தன்னுடனே வைத்திருக்கிறான். பள்ளிக்கு செல்லும்போது துரத்தி வந்தவன் ஓடி வந்தவனை அடித்து கையை உடைக்கிறான். பொதுமக்கள் அனைவரும் பத்தா என்று பெயர் சொல்லி அனைவரும் பயத்துடன் ஒதுங்கி வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சிறுவன் பள்ளி சென்றவுடன் அங்கு உடன் படிக்கும் மற்ற சிறுவர் சிறுமியர்கள் பத்தாவின் ரவுடி தனத்தைக் கூறி இன்னும் பயமுறுத்துகின்றனர். மேலும், ஒரு முறை போலீஸ் ஸ்டேஷன் கதவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தார் பத்தா என்று கூறுகின்றனர்.
பத்தாவாக விஜய் சேதுபதி வீட்டிற்கு வருகிறார். மனைவி லிஜோ மோல் ஜோஸ், ஒரு பெண் குழந்தை இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்த லிஜோ மோலுக்கு விஜய் சேதுபதியின் ரவுடித்தனம் பிடிக்கவில்லை. இவர்களுடைய பெண் பூப்படைந்து விடுகிறாள். அதற்கான சடங்கை பெரிய அளவில் நடத்துவதாக கூறுகிறார் விஜய் சேதுபதி.
இந்நிலையில், பள்ளியில் பொம்மையை வைத்து விளையாடிக் கொண்டிருந்ததை ஆசிரியை பார்த்து விட்டு அவனிடமிருந்து வாங்கி அலுவலக அறையில் இருக்கும் அலமாரியில் வைத்து விடுகிறார். அன்றுடன் பள்ளி முடிந்து முழு ஆண்டு விடுமுறை தொடங்குகிறது.
அன்று இரவு அம்மா அப்பா இருவரும் தூங்கியவுடன் யாருக்கும் தெரியாமல் பள்ளிக்கு சென்று பூட்டிய அறையில் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து அலமாரியில் இருக்கும் தன்னுடைய பொம்மையை எடுத்துக் கொண்டு வருகிறான். அப்போது சிறுநீர் கழிக்க கழிவறைக்கு செல்கிறான்.
வீடு திரும்பும் போது திடீரென்று நினைவு வந்து அலமாரி கதவை மூடிவிட்டு, கழிவறை கதவையும் தாழ்ப்பாள் போட்டுவிட்டு திரும்புகையில் உள்ளிருந்து யாரோ கதவு தட்டும் ஓசை கேட்க நின்று கேட்கிறான். உள்ளே இருந்து, யார் கதவை பூட்டியது? நான் யார் தெரியுமா? பத்தா… நான் வெளியே வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? என்று விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக கூறும் போது பயந்து கதவை திறக்க வந்தவன் அப்படியே ஓடி விடுகிறான்.
நாள் முழுவதும் சாப்பிடாமல் இருக்கிறான். இரவு உணவு அருந்தும் போது அம்மா, காலையில் இருந்து சாப்பிடவில்லை, இரவும் சாப்பிடவில்லை என்றால் இறந்து விடுவாய் என்று கூறுகிறார். அப்போது, விஜய் சேதுபதி கழிவறையில் சாப்பிடாமல் இருந்தால் இறந்து விடுவார் என்ற பயத்தில் யாருக்கும் தெரியாமல் கடையில் பொறை வாங்கி அதை அதே காகிதத்தில் வைத்து பவுடராக்கி கதவின் அடியில் இருக்கும் சிறு சந்தில் நுழைத்து விடுகிறான். இப்படியே தினமும் செய்கிறான். ஒவ்வொரு நாள் அந்த சிறுவன் வரும்போது ஒரு நாள் ஆக்ரோஷமாகவும், மறுநாள் கோபமாகவும், நான்கு நாள் கழித்து கெஞ்சும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மனம் மாறுகிறது. அப்போதும் அவன் பயத்தால் கதவை திறக்காமல் ஓடி விடுகிறான்.
விஜய் சேதுபதி வீட்டுக்கு வரவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்து அனைத்து இடத்திலும் தேடுகிறார்கள். ஆனால் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சந்தேகம் இருக்கக்கூடிய மற்ற ரவுடிகளின் வீட்டிலும் விசாரிக்கிறார்கள்.
ஒருநாள் சிறுவன் சபரியின் அம்மா சித்திரை திருவிழாவிற்கு ஊருக்கு புறப்பட வேண்டும், அங்கு சென்று விடுமுறை முடிந்து தான் திரும்பி வருவோம் என்று கூறுகிறார். இதைக் கேட்டு அத்தனை நாள் தனியாக இருந்தால் விஜய் சேதுபதி இறந்து விடுவார் என்ற பயத்தில் பள்ளிக்கு சென்று தாழ்பாளை திறந்து விட செல்லும் போது விஜய் சேதுபதி நினைவுற்று இருப்பதைக் கண்டு ஊரில் ஒருவரிடம் பத்தா கழிவறையில் இறந்து கிடைக்கிறார் என்று கூறுகிறான்.
பத்தா காவல் நிலையத்தில் இருக்கும் கதவையே உடைத்து வெளியே வந்தவரால் பள்ளி கல்லூரி கழிவறை கதவை உடைத்து வெளியே வர முடியாமல் தவிக்கும் போது நகைச்சுவையாக காட்சி நகர்கிறது. தன்னுடைய அனைத்து விதமான முயற்சிகளும் தோல்வி அடைந்து ரவுடி என்கிற அகங்காரம் உடைந்து மனைவி மகளை நினைத்து வேதனை அடைகிறார்.
பத்தா இறந்து விட்டாரா? இவன் பொம்மையை எடுக்க பள்ளிக்குப் போன நேரத்தில் பத்தா ஏன் அங்கு வந்தார்? என்ற கேள்விகளுடன் இரண்டாம் பாதி தொடங்குகிறது.
விஜய் சேதுபதி முற்றிலும் வித்தியாசமான கதை களத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை மீண்டும் நிரூபித்திருக்கிறார். லிஜோ மோல் ஜோஸ் காதல் கணவன் ரவுடியாக இருப்பதை வெறுத்தாலும் காதல் உணர்வை முகத்தில் தெறிக்க விடுகிறார். சாய் பிரித்விராஜ் மொத்த கதையையும் தன் முதுகில் தாங்கி நடித்திருக்கிறான். குருவி தலையில் பனங்காய் வைத்தது போல் ஒற்றை சிறுவன் ஒட்டு மொத்த கதையையும் வெற்றிகாரமாக சுமந்திருக்கிறான். பல விருதுகள் காத்திருக்கின்றன. வாழ்த்துகள் குட்டி பையா.
சிறுவன் சாய் பிரித்விராஜ், அவன் பொம்மையும், பொறையும் தான் கதாநாயகர்கள்.
தனிமை, பசி, தூக்கம் இவற்றிடம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீசையும் பூமியைப் பார்க்கும் என்பதை உணர்த்தியுள்ளது இந்த படம். தனிமையில் சிக்கிய மனிதனின் உளவியல் அடுத்தத்த நாட்களில் எப்படி மாறும் என்பதை இன்னும் கொஞ்சம் விரிவாகக் கூறியிருக்கலாம்.
இருப்பினும் பாலாஜி தரணித்தரனுக்கு இன்னுமொரு அடையாளத்தை இப்படம் கொடுக்கும்.
1986ல் கதை பயணிப்பதை உறுதிப்படுத்த ஹார்லிக்ஸ் பாட்டில், கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டி, ஆண்டனா, சினிமா பாட்டு புத்தகம், கனகாம்பரம் பூ மற்றும் கோகுல் சாண்டல் டப்பா மூலம் வென்றிருக்கிறார் கலை இயக்குனர்.
பத்தா : ஒன்றும் தெரியாது என்று நினைக்கும் குழந்தைகளிடம் உலகையே கற்றுக் கொள்ளலாம்.

