சார்லி, எம் எஸ் பாக்கர், மோனிகா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜார்ஜ் மரியம் நடிப்பில் சுரேஷ் ஜி இயக்கத்தில் வேகியாகியுள்ள திரைப்படம் “எறும்பு”.
கதைப்படி,
விவசாயக் கூலியான சார்லி, காட்டு மன்னார்கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். வட்டிக்கு கடன் வாங்கி, கடன் வாங்கியவரிடம் அவமானப்படுத்தப்படுகிறார்.
முதல் மனைவி இறந்துவிட, மகள் மோனிகா சிவா, மகன் சக்தி ரித்விக், இரண்டாம் மனைவி சூசன் ஜார்ஜ், கைக்குழந்தை மற்றும் தாய் பல்ரவை சுந்தராம்மாள் ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.
சார்லி கடுமையான கடன் மற்றும் வறுமையிலும் நாட்களைக் கடந்து வருகிறார். இதனிடையே கந்துவட்டிக்காரர் எம்.எஸ்.பாஸ்கரிடம் முப்பதாயிரம் ரூபாய்க் கடனை பெறுகிறார்.
இதனை அடைக்க முடியாததால் ஊர் மக்கள் முன் சார்லி அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் மனமுடையும் சார்லி, தனது இரண்டாவது மனைவியுடன் கரும்பு வெட்டும் வேலைக்காக 15 நாட்கள் செல்கிறார்.
இந்நிலையில் சார்லி குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் ஒரு கிராம் மோதிரத்தை சக்தி ரித்விக் தொலைத்துவிடுகிறான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக், சித்தி வீடு திரும்புவதற்குள் தொலைந்த மோதிரத்தை தேடி அலைகிறார்கள்.
இறுதியில் இதனை கண்டுபிடித்தார்களா? வாங்கிய கடனை சார்லி அடைத்தாரா? தனது சித்தியை எப்படி சமாளித்தனர்? என்பதே படத்தின் மீதிக்கதை…
வறுமையான சூழலில் தனது குழந்தைகளை வளர்த்தெடுக்கும் தந்தையாக சார்லி கண்கலங்க வைத்துள்ளார். அவமானப்படும் குடும்பத் தலைவனாகவும், பாசக்கார தந்தையாகவும் இவரின் அனுபவ நடிப்பு கைத்தட்டல் பெறுகிறது.
தாயை இழந்து வாடும் குழந்தைகளாக நடித்திருக்கும் மோனிகா சிவா மற்றும் சக்தி ரித்விக் அழகாக நடித்து கதாப்பாத்திரத்தை நியாப்படுத்தியுள்ளனர்.
சூசன் ஜார்ஜ் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
குடும்ப சூழலால் கடன் வாங்கி சிக்கிக்கொள்ளும் தந்தையை பற்றிய கதையை எடுத்து காட்டியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் ஜி.
திரைக்கதையின் வலுவில்லாததால் அடுத்து என்ன நடக்க போகிறது என்று எளிதாக கணிக்க முடிகிறது, இது படத்திற்கு பாதகமாக அமைந்துள்ளது. குறுகிய கதாப்பாத்திரம், சிறிய வீடு, குடும்பம் என இதுவரை தமிழ் சினிமாவில் தோன்றிய விஷயங்களே தென்படுகிறது.
திரைக்கதையிலும் கதாப்பாத்திர வடிவமைப்பிலும் இயக்குனர் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். கே.எஸ்.காளிதாஸின் ஒளிப்பதிவு ஓகே. இசையமைப்பாளர் அருண் ராஜ் அவரின் பணியை செய்துள்ளார்.