மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா நடிப்பில், விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “குட் நைட்”.
கதைப்படி,
தூங்கும் போது, அதிக சத்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர் “மோகன்” (மணிகண்டன்). இதனால், தங்கை, வீட்டின் அருகில் இருப்பவர்கள், அலுவலக நண்பர்கள் என அனைவரும் அவரை “மோட்டார்” மோகன் என்று கேலி செய்து வருகின்றனர்.
அவர் காதலித்த பெண் குறட்டையை ஒரு காரணம் காட்டி இவரை வேண்டாம் என்கிறார். இதனால் அதிக விரக்தியில் இருக்கும் மணிகண்டனுக்கு, அணு(மீத்தா) உடன் காதல் ஏற்படுகிறது. ஆனால், தன் குறட்டை பிரச்சனையை மறைத்து அணுவை திருமணம் செய்கிறார் மோகன்.
பின், இந்த குறட்டையால் பிரச்சனை ஏற்பட அதை இருவரும் சமாளித்தார்களா? இல்லை பிரிந்தார்களா? என்ற கேள்விக்கு இரண்டாம் பாதி விடை தரும்.
ஒரு அனுபவ நடிகர் ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்தால் அந்த பாத்திரம் மறைந்து, அந்த பாத்திரத்தின் தாக்கம் மட்டும் நமக்குள் நிற்குமோ அந்த தாக்கத்தை நமக்கு கொடுத்து விட்டார் மணிகண்டன்.
“ஏலே”, “ஜெய் பீம்”, இப்போது “குட் நைட்”. ஆனால், இந்த மூன்று படங்களில் அவர் நடித்த நடிப்பு வெறும் ட்ரைலர் தானோ என்ற சந்தேகம். ஆனால், இன்னும் பல உயரங்களை அவர் தொடப்போகிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மீத்தா ரகுநாத்தின் நடிப்பு பாராட்டை பெறுகிறது. அமைதியான ஒருவராக வரும் அவர், பாத்திரத்தின் துயரங்களை சுமந்து நடித்திருக்கிறார். சீமந்தம் விழாவுக்கு பின் வரும் காட்சியில் அவர் கொடுத்த நடிப்பு சிறப்பு.
ரமேஷ் திலக், ரேச்சல் ரெபேக்கா, கௌசல்யா நடராஜன், பாலாஜி சக்திவேல் என உடன் நடித்த அனைவரும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.
ரமேஷ் திலக் – ரேச்சல் வரும் காட்சிகள் தனித்துவமாகவும், அழுத்தமாகவும் இருக்கிறது.
சிம்பிள் கதை, அதை எப்படி காட்சி படுத்துகிறோம், திரைக்கதை அமைக்கிறோம், அந்த படத்தின் போக்கு எந்த ஜெனரில் இருக்கும் என்ற தேர்வு ஒரு இயக்குனரின் கதைக்கு வெற்றியை தேடி தரும். அந்த வகையில், வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.
மேலும், இவர் தேர்வு செய்த நடிகர்கள் அவரின் வெற்றியை உறுதி செய்துவிட்டனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
படத்தின் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் காட்சி வரை காமெடிக்கு பஞ்சமே இல்லை. சீரியஸான, எமோஷன் கொண்ட ஒரு காட்சியை கூட சிரிக்கும் படியாக டயலாக் மற்றும் திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் விநாயக்.
சியான் ரோல்டன் இசை படத்திற்கு கூடுதல் அழகு செய்துள்ளது. குறிப்பாக “தேனிசை தென்றல்” தேவா பாடிய பாட்டு சிறப்பாக அமைந்துள்ளது.
குட் நைட் – ரைட் சாய்ஸ்.