லோகேஷ் குமார் இயக்கத்தில், தர்மராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், மைக்கேல் தங்கதுரை, காப்ரியேலா, விஷ்ணு தேவி, பிரக்யா நக்ரா, அனுபமா குமார், மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் “N4”.
கதைப்படி,
சூர்யா, சௌந்தர்யா, கார்த்தி, அபிநயா என நால்வரும் சிறுவயது முதல் ஒன்றாக வடிவுக்கரசியிடம் வளர்கின்றனர். மிகவும், நேர்மையாகவும், சந்தோஷமாகவும் இவர்கள் வடசென்னையில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இவர்களோ சம்பளம் குறைத்து தந்த காரணத்தால் அங்குள்ள ரவுடி ஒருவரிடம் பகை வளர்த்துவிடுகின்றனர்.
மறுபுறம், அதிக பணம், சரக்கு மற்றும் பார்ட்டி என விஜய், ஸ்வாதி மற்றும் அவர்களின் நண்பர்கள் என அதே வடசென்னையில் லூட்டி அடித்து வருகின்றனர். இவர்கள் என்னதான் லூட்டி அடித்தாலும், நல் உள்ளம் கொண்டவர்களாகவும், ஒரு சிறுவன் வலிப்பில் தவித்து வந்த பொது அவரை மருத்துவமனையில் சேர்த்து உதவியும் செய்கின்றனர்.
அப்போது, ஒரு நாள் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தோ துப்பாக்கி சுடும் சத்தம் கேட்கிறது. திடிரென அபிநயாவின் வயிற்றில் குண்டடி பட்டு கீழே விழுகிறாள்.
அபிநயாவை சுட்டது யார்? விஜய் மற்றும் ஸ்வாதி வாழ்க்கையில் என்ன திருப்பங்கள் நடந்தது? ரவுடிக்கும் சூர்யாவின் குடும்பத்திற்கும் ரவுடிக்கும் இடையே இருந்த பகை என்ன ஆனது? என்பது படத்தின் இரண்டாம் பாதி.
மைக்கேல் தங்கதுரை, சூர்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிடுக்கான தோற்றம், உடல் பாவனை என கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி நடித்துள்ளார்.
சௌந்தர்யா கதாபாத்திரத்தில் நடித்த காப்ரியேலாவின் நடிப்பு பாராட்டத்தக்கது. கைதட்டி விசிலே அடிக்கலாம். காரணம், சந்தோஷம், துக்கம், கோபம், ஏக்கம் என பல வித எதிஷன்களையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். நவரச நாயகி என்ற பட்டத்தை தட்டிச்சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
விஷ்ணு தேவி இப்படத்தில் ஊமையாக நடித்துள்ளார். அவருக்கு மேக் அப் கொஞ்சம் சுதப்பலாக அமைந்திருந்தாலும், நடிப்பு அவரின் கதாபாத்திரத்திற்கு கை கொடுத்துள்ளது.
அக்ஷய் கமல், அப்சல் அகமத், பிரக்யா நக்ரா, வடிவுக்கரசி என உடன் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை நன்றாக செய்துள்ளனர்.
லோகேஷ் குமாரின் கதை போக்கு பரட்டவேண்டியது, காரணம் வடசென்னை என்றால் புல்லிங்கோ போன்ற ஆட்கள் தான் இருப்பார்கள். அதுவும் அவர்கள் தப்பை மட்டுமே செய்து வருவார்கள் என்ற எண்ணத்தை மாற்றும் விதத்தில் அனைத்து வித பொதுஜன மக்களின் வாழ்க்கையையும் காட்டியுள்ளார்.
திரைக்கதை தொய்வு மட்டுமே இருந்ததே தவிர மற்றபடி குறை கூறும் அளவிற்கு ஒன்றும் இல்லை. மேலும், படத்தின் அளவை குறைத்து வெளியிட்டிருந்தால் தொய்வில்லாத ஒரு ஓட்டத்ததை “N4” கண்டிருக்கும்.
மனிதனின் கர்மவினை, வாழ்க்கையின் யதார்த்தம், நேர்மையாக வரும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்படும் இன்னல்கள் என பல விஷயங்களை இப்படத்தின் மூலம் பேசியிருக்கிறார் இயக்குனர் லோகேஷ்.
திவ்யனின் ஒளிப்பதிவு சிறப்பு. பால சுப்பிரமணியனின் இசை படத்தின் ஓட்டத்திற்கு தூணாக நின்றது. பாடல்கள் கேட்கும் ரகம்.
N4 – வடசென்னை வாழ்வியலின் ஒரு அங்கம்.