சார்லி, லிங்கா, அபர்ணதிம், விவேக் பிரசன்னா, காயத்ரி, தீனா, “நக்கலைட்ஸ்” தனம் நடிப்பில், கார்த்திக் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் உருவாகி, “ஆஹா” ஓடிடி தளத்தில் டிசம்பர் 30ம் தேதி வெளியாகவுள்ள படம் “உடன்பால்”.
கதைப்படி,
லிங்காவின் தாய் இறந்து 5 ஆண்டுகளுக்கு பின் தான் திதி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்கிறார். திதிக்கு வழிபாடுவதற்காக ஊரிலிருந்து லிங்காவின் தங்கை காயத்ரியும் அவரின் கணவர் விவேக் பிரசன்னாவும் வருகை தருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு பின் திதி கொடுப்பதில் ஒரு உள்குத்து உள்ளது. லிங்கா, காயத்ரி, தீனாவின் தந்தையான சார்லியிடம் தங்கள் வாழ்ந்து வரும் வீட்டை விற்றால் தான் லிங்காவின் கடனும், காயத்ரியின் கணவர் விவேக்கும் வேறொரு தொழில் தொடங்க முடியும். அதை பேசுவதற்காக இதை ஒரு சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொண்டனர்.
ஆனால், சார்லியோ இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்பு, அவர் வழக்கமாக செல்லும் காம்ப்ளெக்ஸுக்கு சென்றுவிட, சற்று நேரத்தில் அந்த காம்ப்ளெக்ஸ் இடிந்து விழுந்ததாக செய்திகள் வெளியாகின்றன. அந்த செய்தியில், கட்டிட இடிபாட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 20 லட்ச ரூபாய் அரசாங்கம் வழங்கவுள்ளது என்றும் செய்திகள் வெளிவர. அப்பா இறந்து நம் கஷ்டத்தை தீர்த்துவிட்டார் என்று முடிவே செய்கின்றனர் லிங்காவும், காயத்ரியும்.
அப்பா என்ன ஆனார் என்ற முழு விவரம் அறியும் முன்பே ஆளுக்கு எவ்வளவு பங்கு என்று சண்டை போட்டுக் கொள்ளும் அளவிற்கு இது ஒரு தினுசான குடும்பமாக உள்ளது.
சரி இதெல்லாம் விடுங்க, சார்லி என்ன ஆனார்? பணம் கிடைத்ததா? தினா எங்கே சென்றார் என்ற கேள்விகளுக்கு விடை வேணுமா? நிச்சயம் “உடன்பால்” படத்தை பாருங்க.
லிங்கா மற்றும் விவேக் பிரசன்னா இருவருக்குமான காம்பினேஷன் கலகலவென இருக்கும்.
லிங்காவின் கடன் சுமை மற்றும் கடமை அவரின் முகத்தில் தெரிந்தது. விவேக் பிரசன்னாவின் நடிப்பும், காயத்ரியின் நடிப்பும் அத்தனை தத்ரூபம்.
நாத்தனார்களான காயத்ரியும், அபர்ணதியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை.
படத்தில் துறு துறுவென சுற்றித் திரியும் தர்ஷித் சந்தோஷும், விகாணும் குழந்தை நட்சத்திரங்களாக கலக்கியுள்ளனர்.
கார்த்திக் ஸ்ரீநிவாசன் எந்த அளவிற்கு கதையாகவும், காமெடியாகவும் சிந்தித்திருப்பார் என்பது படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படும்.
பெரும்பாலும் மலையாள சினிமாவில் மட்டும் தான், ஒரு வீடு, ஒரு குடும்பம், ஒரே கிராமம் என சிறிய பட்ஜெட்டில் வெற்றி படங்களை இயக்கும் இயக்குனர்கள் அதிகம். தற்போது, தமிழ் சினிமாவின் பட்ஜெட்டை குறைத்து, திரைத்துறையை உயர்த்த கால் தடம் பதித்துள்ளார் இயக்குனர் கார்த்திக் ஸ்ரீனிவாசன்.
இசை மற்றும் ஒளிப்பதிவு கதையின் ஓட்டத்திற்கு சூடு சேர்த்தது.
உடன்பால் – சிரிக்கவும், சிந்திக்கவும்