டோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். தற்போது ‘சபரி’ படத்திலும் இதற்கு முன்பு ஏற்றிடாத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். மஹா மூவிஸ் பேனரின் கீழ் இந்தப் படத்தை மகேந்திரநாத் கொண்டலா தயாரிக்க அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். மஹரிஷி கொண்டலா இந்தப் படத்தை வழங்குகிறார். தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என உருவாகி வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக முடிந்திருக்கிறது. இந்த நிலையில் படக்குழு, படம் பற்றி பல விஷயங்களை பேசியுள்ளது.
படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார் கூறுகையில், “எங்கள் ‘சபரி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. மகேந்திரன் போன்ற தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். வலுவான இந்தக் கதையை நம்பி படத்திற்கு நிறைய செலவு செய்திருக்கிறார். நான் வேலை பார்த்த தயாரிப்பாளர்களில் மிகச் சிறந்தவர். அவர் கொடுத்த ஒவ்வொரு ரூபாயையும் இயக்குநர் அனில் கட்ஸ் படமாக திரையில் கொண்டு வந்துள்ளார். பல இடங்களில் இந்தக் கதையை நாங்கள் படமாக்கி உள்ளோம். படம் நன்றாக வந்துள்ளது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் டப்பிங் பணிகள் தொடங்கும். விரைவில் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவோம்” என்றார்.
தயாரிப்பாளர் மகேந்திரநாத் கொண்டலா கூறுகையில், “இந்தக் கதை ஒரு வலுவான எமோஷனல்- த்ரில்லர். படப்பிடிப்பை நாங்கள் முடித்து விட்டோம். தயாரிப்பாளர்களை நினைத்து பார்க்கும் ஒரு சில திரைக்கலைஞர்களில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரும் ஒருவர். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும்” என்றார்.
படத்தின் இயக்குநர் அனில் கட்ஸ் பேசும்போது, “நாவலின் கதையை எடுத்து அதை படமாக்கியுள்ளோம். இதில் படத்திற்குரிய அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இருக்கிறது. த்ரில்லர், எமோஷன்ஸ் என உள்ளடக்கிய இந்தப் படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும். முன்னணி கதாபாத்திரத்தில் இளம் வயதுள்ள, சுதந்திரமான, புத்திசாலிப் பெண்ணாக ‘சபரி’ படத்தில் வரலக்ஷ்மி மேம் நடித்திருக்கிறார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.