ஷ்ரதா ஸ்ரீநாத், ரோகினி, சுபத்ரா ராபர்ட் மற்றும் சிலர் நடிப்பில், தீபக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “விட்னஸ்”. முத்துவேல் மற்றும் எஸ்.பி.சாணக்யா இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
கதைப்படி,
பார்த்திபன் என்ற 20 வயது இளைஞர், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யச் செல்லும் போது உயிரிழக்கிறார்.
அந்த இளைஞரது அம்மாவான இந்திராணி(ரோகினி), ஒரு துப்புரவுப் பணியாளர். தனது ஒரே மகனை இழந்துவிட்ட இந்திராணி, சட்டவிரோதமாக அவனைக் கூட்டிச்சென்று அந்தப் பணியில் ஈடுபடுத்தி, கொன்றவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று உறுதி கொள்கிறார்.
பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தலைவர், அவருக்கு உறுதுணையாக வருகிறார். இன்னொருபுறம், பார்வதி(ஷ்ரதா ஸ்ரீநாத்) என்ற இளம் கட்டடக் கலைஞர் இந்திராணி்யிடம் முக்கியமான சில ஆதாரங்களை ஒப்படைக்கிறாள். அந்த ஆதாரங்களைக் கொண்டு பெத்தராஜுவும், இந்திராணியும், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
அதன் விளைவாக, சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
இதற்கான பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.
வழக்கு என்ன ஆனது? நீதி கிடைத்ததா? என்பதே மீதிக் கதை….
ரோகினி நடிப்பில் அனுபவம் தெரிகிறது. பல எமோஷன்களை வெளிப்படுத்தும் ஒரு பாத்திரம் அவருடையது. பாத்திரத்திற்கு தேவையான அனைத்தையும் சரியாக செய்து நியாயம் கற்பித்திருக்கிறார்.
கதையின் ஆரம்பத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளது ஷ்ரதா ஸ்ரீநாத்தின் கதாபாத்திரம். மற்ற படி பெரிய வேலை இல்லை அவருக்கு.
சமூகத்திலுள்ள பல பிரச்சனைகளை ஒரே படத்தில் பேச முயற்சித்திருக்கிறார் இயக்குனர் தீபக். அந்தவகையில் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என இரு களத்திலும் சரியாக விளையாடியுள்ளார் என்றும் சொல்லலாம்.
விட்னஸ் – “அவா”ளின் திமிர்