விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா இனைந்து தயாரித்துள்ள படம் “கட்டா குஸ்தி”. விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஹரிஷ் பேரடி, கருணாஸ், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், ஜஸ்டின் பிரபாகரன் இசையில், செல்லா அய்யாவு இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கதைப்படி,
8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் வீரா (விஷ்ணு விஷால்), அவருக்கு மனைவியாக வருபவர் நீண்ட முடி வைத்திருக்க வேண்டும் மற்றும் அவரை விட குறைவாக படித்திருக்க வேண்டும் என்பதே அவரின் நிபந்தனை. ஆனால், கீர்த்தி (ஐஸ்வர்யா லக்ஷ்மி) குஸ்தி விளையாடும் பெண் மற்றும் பட்ட படிப்பும் படித்துள்ளார்.
கீர்த்தியின் வீட்டார் பெண் 7ஆவது வரை தான் படித்துள்ளார் என்றும், அவருக்கு சவுரி முடி வைத்துவிட்டு அவருக்கு நீளமான கூந்தல் இருக்கிறது என்றும் பொய் சொல்லி திருமணத்தை முடித்துவிடுகின்றனர்.
பின்பு என்ன? அதான் கதை. கீர்த்தி சொன்ன அனைத்தும் பொய் என அறியும் வீரா அடுத்து என்ன செய்தார்? என்பது இரண்டாம் பாதி.
வயிறு குலுங்க சிரித்து ஒரு படம் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. சிரித்து சிரித்து ஒரு படம் பார்க்க தாகம் உடையவர்கள் இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். அவ்வளவு காமெடி படத்தின் முதல் பாதி.
காளி வெங்கட், கருணாஸ், முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி என அனைவரும் போட்டி போட்டு சிரிக்க வைத்திருக்கிறார்கள். அப்பப்பா, பல காட்சிகளில் கைதட்டல் தான். எங்கும் சோர்வாடையாத திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் செல்லா அய்யாவு.
ஐஸ்வர்யா லக்ஷ்மியின் நடிப்பு திறனை வெளிப்படுத்த இந்த படம் அவருக்கு உறுதுணையாய் இருந்துள்ளது. எல்லா கலைஞர்களுக்கும் அவர்களின் வாழ்க்கையில் “தி கரியர் பேஸ்ட்” படம் என ஒன்றிருக்கும். அந்த வகையில் ஐஸ்வர்யாவின் கரியர் பேஸ்ட் கட்டா குஸ்தி. ஆக்ஷன் காட்சிகளில் அதகளமாகவும், ரோமன்ஸ் காட்சியில் அழகாகவும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.
எத்தனை காமெடி கலைஞர்கள் இருந்தாலும், எக்ஸ்பிரஷன் மூலமே நம்மை சிரிக்க வைத்து விடுகிறார் விஷ்ணு விஷால். நடிப்பும், ஆக்ஷனும் ரசிக்கும் வகையறா.
படத்திற்கு கூடுதல் பலம், ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களும் பின்னணியும் தான்.
இடைவேளை வரை இடைவேளை இல்லாமல் சிரிக்கலாம். இரண்டாம் பாதி, சென்டிமென்டும் சுவாரஸ்யமும்.
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் இப்படம், இரண்டு தரப்பு ஆடியன்ஸுக்கும் பிடிக்கும்.
கட்டா குஸ்தி – பக்கா என்டர்டெயினர்