படைப்பாளன் திரைவிமர்சனம்

தியான் பிரபு இயக்கி நடித்து, “காக்கா முட்டை” ரமேஷ் – விக்கி, வேல்முருகன், வளவன், அஷ்மிதா, நிலோபர், மனோபாலா, “அருவி” பாலா நடிப்பில், பால முரளி இசையில் உருவாகியுள்ள படம் “படைப்பாளன்”.

கதைப்படி..,

கதை திருட்டு, இயக்குனராக வேண்டும், சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று சுத்தித்திரியும் லட்சக்கணக்கானோரின் துயரத்தை மையம்காக் கொண்டு இப்படம் துவங்குகிறது.

இயக்குனராக வேண்டுமென ஆசைப்படும் ஹீரோ தியான் பிரபு, மனோபாலா தலையிலான தயாரிப்பு நிறுவனத்திடம் கதை கூறுகிறார். அப்போது, மிகவும் திகிலான கதையை திகிலான உடல் பாவனையுடனும் சத்தத்துடனும் சொல்லி கதையை ஓகே செய்கிறார் தியான் பிரபு.

இதற்கு முன்னதாகவே வளவன் வைத்திருக்கும் தயாரிப்பு நிறுவனத்தில் கதையை சொல்லி அவர்கள் அக்கதையை திருடி ரூ.100 கோடி செலவில் படமாக்க காத்துள்ளனர். அதை எப்படி சமாளித்தார்? அவர் கதையில் சொன்ன பேய் யார்? கதை திருட்டிற்கு நீதி கிடைத்ததா? சினிமா துறையில் சாதிக்க நினைத்தவர்களின் வாழ்க்கை எப்பேர்பட்டது? என்ற பல கேள்விகளை கொண்டது தான் மீதிக்கதை…

காக்க முட்டை படத்தின் மூலம் பிரபலமான ரமேஷ் மற்றும் விக்கி. இருவரையும் மீண்டும் திரையில் பார்த்தது மகிழ்ச்சி.

வேல்முருகன், வளவன், மனோபாலா ஆகியோர் சிறிது நேரம் மட்டும் வந்தாலும், கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தனர்.

இயக்குனராக தியான் பிரபு தேர்வு செய்த கதைக்களம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சி. ஆனால் திரைக்கதையில் சிறு கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற எண்ணம் தான். பேய் படம் என்றால் ஒலிக்கு மிக முக்கிய பங்குண்டு. அந்த பங்கு இப்படத்தில் சில இடங்களில் மட்டுமே எடுபட்டது.

நடிகனாக தியான் பிரபு அளவான நடிப்பையே வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்லலாம்.

பால முரளியின் இசை சிறப்பு. வேல்முருகனின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் நம்மை மிரட்டியது.

வெரோனிகா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலோபரை வைத்து கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு மேலாக காட்சி இருக்கும். அவர் அப்படத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசக்கூடிய கதாபாத்திரம் என்பதால் இது ஆங்கிலப்படமா? தமிழ்படமா? என்ற கேள்வியை முன்வைக்கும் விதமாக இருக்கிறது.

அந்த சில இடத்தில் மட்டும் முற்றிலும் தமிழையே பயன்படுத்தியிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

படைப்பாளன் – தமிழில் உருவான புதிய படைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *