ஆதி, ஆகான்ஷா சிங், க்ரிஷா குரூப், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில், ப்ரித்வி ஆதித்திய இயக்கத்தில் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ‘கிளாப்’ நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஓட்டப்பந்தய வீரரான ஆதி ஒரு விபத்தில் தனது காலையும், தனது தந்தை பிரகாஷ் ராஜையும் இழக்கிறார். இதனால் தேசிய ஓட்டப்பந்தய போட்டியில் பங்கேற்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வருகிறார் ஆதி. இந்நிலையில் தனது காதலி ஆகாங்ஷா சிங் வறுபுறுத்தலின் கீழ் திருமணம் செய்து கொள்கிறார்.
இதனிடையே மதுரையில் உள்ள ஒரு பெண் விளையாட்டு வீரரைப் பற்றி அறிந்து கொள்கிறார்.தன்னால் சாதிக்க முடியாததை, அந்த பெண் சாதிக்க வேண்டும், தேசிய சாம்பியனாக நிற்க வேண்டும் என ஆதி ஆசைப்படுகிறார்.
அந்த பெண்ணுக்கு பயிற்சி அளிக்க ஒரு பயிற்சியாளர் கூட முன் வரவில்லை. இதன் பின்னணியில் நாசர் இருப்பது ஆதிக்கு தெரிய வருகிறது. நாசர் அவ்வாறு செய்ய காரணம் என்ன? இறுதியில் அந்த பெண் ஜெயித்தாரா? இல்லையா என்பதுதான் படத்தின் கதை
ஆதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது ஒரு காலை இழந்து அவர் பரிதவிக்கும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்துள்ளார். மேலும் அவரின் வலியை அவரின் நடிப்பின் மூலம் நம்மால் உணர முடியும்.
ஆகாங்ஷா சிங் அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு பாராட்டத்தக்கது.
ஆதியின் தந்தையாக வரும் பிரகாஷ் ராஜ் படத்தின் முதல் காட்சியில் மட்டும் வருகிறார். நாசர் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
க்ரிஷா குருப்பின் கடினமான உழைப்பு நம்மை வியப்படைய செய்திருக்கும், அவர் இந்த படத்திற்காக பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. அவருக்கு தனி பாராட்டுகள்.
கனா, இறுதிச்சுற்று, பிகில், எதிர் நீச்சல் என விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை ஏற்கனவே பார்த்துவிட்டதால் கிளாப் படம் சிறிது அதே பாணி தான்.
இருந்தாலும் ப்ரித்வி ஆதித்யா இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்காத வகையில் திரைக்கதை அமைத்தது இந்த படத்திற்கு முக்கிய பலம்.
இளையராஜாவின் பின்னணி இசை அவரின் அனுபத்திற்கு ஏற்றவாறு இல்லை சிறிது கவனமாக இருந்திருக்கலாம். பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு ஓகே.
‘கிளாப்’ – பீல் குட் மூவி