“பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது”
நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பழமொழி இது. பொதுவாக புதுத்துணி, நகை வாங்கும் போதும், வீட்டில் விசேஷங்களுக்கு நாள் குறிக்கும் போதும் இப்பழமொழியை நாம் பயன்படுத்துவது வழக்கம்.
வாரா வாரம்தான் புதன்கிழமை வருகிறதே… அப்பறமென்ன புதன் கிடைக்காது?
பொருள் அறியாமல், நாம் உபயோகித்து வரும் பல பழமொழிகளில் இதுவும் ஒன்று.
உண்மை என்னவென்று பார்ப்போமா?
பொன் என்பது வியாழன்(JUPITER) கோளைக் குறிக்கும் புதன் என்பது மெர்குரி என்று அழைக்கப்படும் மற்றொருக் கோளாகும். வியாழன் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றிவருகிறது, புதனோ ஆண்டிற்கு நான்கு முறை சூரியனை சுற்றிவருகிறது. இதற்குக் காரணம் புதன் சூரியனுக்கு அருகிலும் வியாழன் தொலைவிலும் உள்ளதுதான்.
புதன்(MERCURY) சூரியனுக்கு அருகில் இருப்பதால் சூரியனின் ஒளியில் இதை பார்ப்பது கடினம். ஆனால், வியாழன் உருவத்தில் பெரியது, சுற்றி வரும் தூரம் மற்றும் சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் அதிகம். இதனால் வியாழனை வெறும் கண்ணால் எளிதாகப் பார்க்க முடியும்.
இப்போது பழமொழிக்கு மறுபடியும் வருவோம்.
வியாழனைப் பார்க்க முடிந்தாலூம் புதனைப் பார்க்க முடியாது அதாவது பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
இதை இன்று(22-05-2020) பதிவிட காரணம் உள்ளது. இன்று மாலை சூரியன் மறைந்தவுடன் மேற்கு அடிவானைப் பார்த்தீர்கள் என்றால் புதனைப் பார்க்கலாம். இதில் மற்றொரு சிறப்பு இது வெள்ளிக் கோளுக்கு ( Venus) மிக அருகே காட்சியளிக்கும்.
எப்படிப் பார்ப்பது?
மாலை சூரியன் மறைந்தவுடன் வானில் முதலில் கோள்கள்தான் தெரியும் சற்று நேரத்தில் இங்கொன்றூம் அங்கொன்றுமாக நட்சத்திரங்கள்(STARS) தோன்ற ஆரம்பிக்கும். ஆக, சூரியன் மறைந்தவுடன் நட்சத்திரங்கள் தோன்றுவதற்கு முன்பாகக் கோள்கள் (PLANETS) தோன்றூம் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சூரியன் மறையும் தருவாயில் மேற்கே பாருங்கள்.
அடிவானில் வெள்ளியும் அதன் இடப்புறத்தை ஒட்டி புதனும் தெரியும். உங்களுக்கு கால் மணிநேரம்தான் இக்காட்சி கிடைக்கும், எனவே நேரத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் அடிவானில் மேகங்கள் இருக்குமாதலால் மேகத்தினால் இவை மறைக்கப்படும் வாய்ப்பும் அதிகம்.
நல்வாய்ப்பு இருந்தால் புதனை நீங்கள் பார்ப்பீர்கள். பார்த்தால் பதிவிடுங்கள்.
தொலைநோக்கி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னர் ஒரு பிரபல வானவியல் அறிஞர் தமது மரணப் படுக்கையில் ”புதன் கோளைக் கடைசி வரை கண்ணால் பார்க்காமலே சாகிறேன்” என்று வருந்தினாராம்.
( Today Venus Mercury conjunction and it is the closest approach of the year)
– பாலா பாரதி