2018 விமர்சனம் – (4/5);

குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா நடிப்பில், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் “2018”.

கதைப்படி,

2018ல் பொழியும் மழையுடன் இப்படம் ஆரம்பிக்கிறது. இந்த சூழலில், கடுமையான பணிச்சுமையால் மிலிட்டரியில் இருந்து பாதியில் வந்த டோவினோவின் வாழ்க்கை.

குஞ்சாகோ போபனின் பல வருட உழைப்பால் கட்டிய புது வீடு, மனைவி மற்றும் குழந்தை.

தனது இரண்டு மகன்கள் (நரேன் மற்றும் ஆஸிப் அலி), மருமகள், பேத்தி என மீனவ வாழ்க்கை வாழ்ந்து வரும் லால்.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சரக்கு லாரி ஓட்டிச் செல்லும் கலையரசனின் குடும்பம்.

டிவி நிறுவனத்தில் பணிபுரியும் அபர்ணா பாலமுரளி.

இரண்டு வெளிநாடு சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளாவை சுற்றிக் காட்டச் செல்லும் வாகன ஓட்டி அஜு வர்கீஸின் வாழ்க்கை மற்றும் குடும்பம்.

மனக்கசப்பால் தனது மனைவியை பிரிந்து இருக்கும் வினித் சீனிவாசனின் வாழ்க்கை மற்றும் குடும்பம்.

என படத்தில் பல குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை நடத்தி வரும் வேலையில் தான் எதிர்பாராத இந்த வெள்ளமும் வருகிறது.

வெள்ளத்தில் சிக்கியவர்கள் எப்படி தப்பித்தார்கள்? யார் யாரெல்லாம் உதவி செய்தார்கள்? வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார்??? என்பதை மிக யதார்த்தமாக, சுவாரஸ்யமாக, தத்ரூபமாக காட்சிப்படுத்தபட்டிருக்கும் கதை இது.

கதாபாத்திரங்களின் அறிமுகத்தை முதல் பாதியிலும், வெள்ளம் மற்றும் பாதிப்புகளை இரண்டாம் பாதியிலும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப்.

ஓவ்வொரு காட்சியிலும் ஒவ்வொருவரின் போராட்டத்தை காட்சி படுத்தி இரண்டாம் பாதி முழுவதும் நம்மை இருக்கையின் ஓரத்தில் அமர்த்திவிடுகிறது.

பல காட்சிகள் க்ராபிக் என்றாலும், துளியும் நமக்கு அந்த காட்சிகள் க்ராபிக் என்று தெரியாது. படத்தின் பெரும் பலம் அது தான்.

மேலும், ஆவணப்படமாக்க வேண்டிய ஒரு கதையையும், களத்தையும் இவ்வளவு த்ரில்லிங்காக ஒருவரால் இயக்க முடியுமா? என்று கேட்டால் அது ஜூட் ஆண்டனியால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.

கை, கால் உடைந்த குழந்தை, அவரின் பெற்றோர் மூழ்கும் வீட்டில் சிக்கிக்கொள்ளும் காட்சி. குன்றின் மேல் இருக்கும் வீட்டில் சிக்கிக்கொண்ட கண் தெரியாத நபர். கயிற்றை மட்டும் பயன் படுத்தி ஹெலிகாப்டரில் ஏற்றப்படும் கர்ப்பிணி பெண் என பலரின் சிக்கலை திரைக்கதை அமைத்து, திக் திக் நிமிடங்களாகவே நம்மை 2018 படம் எண்டர்டெய்ன் செய்துள்ளது.

ஒருவரையும் சாகவிடாமல் காக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே படம் பார்க்கும் அனைவருக்கும் இருக்கும்.

ஒட்டுமொத்த கேரளா வெள்ளத்தை தத்ரூபமாக கண்முன்னே நிறுத்தி கண்ணீரை கொண்டு வர வைத்து விட்டார் இயக்குனர்.

படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் தங்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியோடு செய்து கதாபாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

அகில் ஜார்ஜின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம். வெள்ளக் காட்சி எடுக்கப்பட்ட விதத்தை எப்படி விளக்கம் செய்வது என்றே தெரியவில்லை. வெள்ளைத்தை கட்டலாம். ஆனால் அந்த நீர்மட்டத்தை காட்டியது தான் கைத்தட்டலுக்குரிய விஷயம்.

ஸ்ரீஜா ரவியின் தமிழ் வசனங்கள் நன்றாகவே கைகொடுத்திருக்கின்றன.

நோபின் பாலின் பின்னணி இசை கதையோடு நம்மை பயணிக்க வைத்திருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *