தலைவன் தலைவி விமர்சனம் – (3.5/5);

விஜய் சேதுபதி, நித்யா மேனன், ஆர்.கே.சுரேஷ், தீபா, ரோஹன், காளி வெங்கட் மற்றும் பலர் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள படம் தான் “தலைவன் தலைவி”.

கதைப்படி,

மதுரையில் ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி, தந்தை சரவணன், தாய் தீபா மற்றும் தங்கை, தம்பியுடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வளநாட்டை சேர்ந்த நித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். பார்த்தவுடனே இருவருக்கும் பிடித்து போக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். சில நாட்களில் விஜய் சேதுபதி, அவருடைய தம்பி, மற்றும் தந்தை அனைவரும் ரவுடிகள் என தெரியவர, நித்யா மேனன் வீட்டில் இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்கின்றனர்.

ஆனால், தனது வீட்டை எதிர்த்து விஜய் சேதுபதியை திருமணம் செய்துகொள்கிறார். நித்யா மேனன் திருமணம் ஆன சில நாட்களில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு பிரிகிறார்கள். இதை காரணமாக வைத்து இரண்டு குடும்பத்தாரும் இருவரையும் பிரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.

இறுதியில் விஜய் சேதுபதி நித்யா மேனன் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இருவருக்கும் என்ன தான் பிரச்சனை? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விஜய் சேதுபதி எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தாயா, மனைவியா என்று பரிதவித்து நடித்து இருக்கிறார். ஆனால் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் நித்யா மேனன், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதியிடம் சண்டை போடுவது, அடிப்பது, காதலிப்பது என்று அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். சரவணன், தீபா, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத், ரோஷினி ஹரிப்ரியன், மைனா நந்தினி, காளி வெங்கட், வினோத் சாகர், சென்றாயன் ஆகியோர் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறார்.

குடும்பத்தில் நடக்கும் சண்டையை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். குறிப்பாக கணவன் மனைவி பிரச்சனை, தன்மான உணர்வு, விட்டு கொடுத்து போதல் ஆகியவற்றை திரைக்கதை மூலம் சொல்லி இருக்கிறார். கணவன் மனைவி இடையே நடக்கும் சண்டைக்கு விவாகரத்து முடிவு கிடையாது என்று சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். படம் முழுக்க கதாபாத்திரங்கள் அதிகம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியை பார்க்கும் போது, அது காமெடி காட்சியா, சீரியஸான காட்சியா என்று தெரியவில்லை.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு பாடல் மட்டுமே தாளம் போட வைத்து இருக்கிறது. பின்னணி இசையை காட்சிகளுக்கு ஏற்றார் போல் கொடுத்து இருக்கிறார். சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.