கன்னியாகுமரி அருகே காற்றாலை அதிகம் இருக்கும் நிலத்தில் படப்பிடிப்பு நடத்த வருகிறது ஒரு படக்குழு.
அங்கு அடையாளம் தெரியாத ஒரு இளம் பெண்ணின் உடலை அவர்கள் பார்க்கின்றனர் படக்குழு. இதனால் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்படுகிறது. போலீஸ் விசாரணை நடத்துகிறது. போலீஸ் விசாரணை நடத்த, அது காணமல் போன பிரபல திரைப்பட நடிகை என கண்டறிகின்றனர்.
பின், அது நான் அல்ல என்று காணாமல் போன நடிகை மீண்டு வர, போலீஸுக்கு அழுத்தம் அதிகமாகிறது. பின்பு, கன்னியாகுமரியில் லாட்ஜ் ஒன்றை நடத்தி வரும் லைலாவின் மகளாக வரும் வெலோனி தான் அது என்று கண்டுபிடிக்கிறார்கள்.
வெலோனி எதற்காக கொலை செய்யப்பட்டார்.? யாரால் கொலை செய்யப்பட்டார்.? என்று கண்டறிய சப்-இன்ஸ்பெக்டராக வரும் எஸ் ஜே சூர்யாவிடம் இந்த வழக்கு கொடுக்கப்படுகிறது.
மனைவி ஆனந்தி (ஸ்ச்மிருதி வெங்கட்), ஒரு வயதான மகன் அப்புச்சி என மிடிள் கிளாஸ் வாழ்க்கையாக வாழ்ந்து வரும் எஸ் ஜே சூர்யா வழக்கை தனது பாணியில் விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
இறந்த 18 வயதான வெலோனியின் வாழ்க்கையை மீடியா பந்தாடுகிறது. அவளது அழகை வைத்து தவறான பார்வையில் அவளை சமூகம் பார்வையிடுகிறது.
இந்த செய்திகள் அனைத்தும் வதந்தியாக பரப்பப்பட்டு வருகிறது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா எஸ் ஜே சூர்யா.? என்பதே இந்த தொடரின் மீதிக் கதை.
வெலோனியை திருமணம் செய்யப் போகும் குமரன் தங்கராஜன் ஆரம்பித்து, அவளை ஒரு தலை காதல் புரியும் டோனி, காட்டிற்குள் வேட்டையாடும் அண்ணன் தம்பிகள் மூவர், டாக்டர், காமூகன் வலன், லைலா என பலர் மேலும் இந்த வழக்கைக் கொண்டு சென்று தனது விசாரணையை நடத்துகிறார் எஸ் ஜே சூர்யா.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மேல் விழும் முடிச்சுகள் ஒவ்வொன்றும் அவிழ்ந்துவிட, எப்படி கொலையாளியை கண்டுபிடித்தார் என்பது சுவாரஸ்யம். விவேக் பிரசன்னாவின் டைமிங்க் கெளண்டர்கள், கன்னியாகுமரி பேச்சு மொழி இரண்டும் நம்மை எண்டர்டெயின்மெட் செய்ய பலமாக இருந்தது.
மேலும், படத்தில் பேசப்பட்ட தமிழ் எளிதில் எல்லோருக்கும் புரிந்துவிடாது. அது தான், படத்திற்குள் கடைசி வரை நம்மை பயணிக்க வைத்ததன் மூலக்காரணம்.
ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிய தூண்கள் என்றால் அது இந்த இருவர் மட்டுமே வெலோனியாக நடித்த சஞ்சனாவும் விவேக் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவும் தான்.
தனக்கு கொடுக்கப்பட்டதை மிக தெளிவாகவும் கச்சிதமாகவும் செய்து முடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா. தனது உடல் மொழி, கண் பார்வை, மிரட்டும் தோனி, கோபம் என அனைத்தையும் ஒருசேர இப்படத்தில் கொடுத்து மிரள வைத்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
மேலும், மது அருந்தியபின் அவர் நடிக்கும் சிங்கிள் ஷாட் காட்சி அபாரம். உடல் சிலிர்க்கும் நடிப்பு.
லைலாவுடனான காட்சியில் ஒரு நிமிடம் மாநாடு படத்தில் தோன்றிய எஸ் ஜே சூர்யாவை கண்டு ரசிக்கலாம். அப்படியொரு மிரட்டலான நடிப்பைக் கொடுத்து பார்ப்பவர்களை அசரடித்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா.
ஒவ்வொரு காட்சியிலும் மிளிர்கிறார் வேலோனியாக நடித்த சஞ்சனா. காட்சிக்கு காட்சி கூடுதல் அழகோடு நம்மை ரசிக்க வைத்திருக்கிறார். அதிலும், ஒரு கதாபாத்திரம் அவளை அழைத்துச் சென்ற போது, அவளது அழகும், கொஞ்சலும், காதலும், வேதனையும், தனிமையும் என அவள் கதாபாத்திரத்தில் நம்மையும் உடன் அழைத்துச் செல்லும் அளவிற்கு மிகக் கச்சிதமான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சஞ்சனா.
ஆங்கிலோ இண்டியனாக சஞ்சனாவின் தாயாக நடித்த லைலாவின் நடிப்பையும் நாம் பாராட்டிதான் ஆகவேண்டும்.
காட்டில் வாழும் தாய் மற்றும் மூன்று மகன்கள் இவர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளனர். டேனி மற்றும் விக்னேஷ் கதாபாத்திரங்களில் நடித்த இருவருமே கதைக்கேற்ற சரியான தேர்வு தான். அதிலும், விக்னேஷாக கதாபாத்திரத்தில் வாழ்ந்த குமரன் தங்கராஜ்ஜை வெகுவாக பாராட்டலாம். சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு காலடி எடுத்து வைத்து அதில் முத்திரையும் பதித்திருக்கிறார்.
வலன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும் தனது தோற்றத்தாலும், குரலாலும் காட்சிக்கு காட்சி மிரட்டியிருக்கிறார்.
வேகம் குறைந்து பொறுமையை ஆங்காங்கே சற்று தொய்வடைந்தாலும், ஒளிப்பதிவும் பின்னணி இசையும் நம்மை அசைய விடாமல் கட்டிப்போட்டு விடுகிறது.
சரவணன் ராமசாமியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து தான். இப்படியொரு காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்திருக்கிறார் சரவணன். சைமன் கே கிங் இசையில் பின்னணி இசை மிரட்டலாக இருக்கிறது. கதையோடு பயணித்து நாம் செல்ல பின்னணி இசை கைகொடுத்திருக்கிறது.
என்னதான் வெப்-சீரிஸாக இருந்தாலும். முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எபிசோடுகளை மட்டும் வைத்து ஒரு படமாக திரையில் வெளியிட்டிருந்தால். பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யமாய் இந்த ஆண்டின் பெஸ்ட் க்ரைம் த்ரில்லராக அமைந்திருக்கும்.
வதந்தி – வேகமாய் பரவியது.