முருகதாஸ், பேபி பிரதிக்ஷா நடிப்பில், ஹென்றி இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ள படம் “ராஜா மகள்”.
கதைப்படி,
ஒரு சிறய கடை வைத்து தொழில் நடத்தி வரும் ஆடுகளம் முருகதாஸ், தனது மனைவி மற்றும் ஒரே மகள் பிரதிக்ஷாவுடன் வாழ்ந்து வருகிறார். மகள் மீது அதீத அன்புடன் இருக்கும் முருகதாஸ் கடையை விட்டால் அதிக நேரம் தனது மகளுடன் மட்டுமே செலவிடுகிறார்.
மகள் எதை கேட்டாலும் மறுக்காமல் அவளின் விருப்பத்திற்காக வாங்கி கொடுத்து பாசத்தோடு வளர்க்கிறார். வாங்கிய பொருளையே தனது மகள் திரும்ப கேட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் தன் மகளின் ஆசைக்காக அனைத்தையும் வாங்கிக் கொடுக்கிறார்.
அந்த அளவுக்கு மகள் மீது முருகதாஸ் அன்பு வைத்திருக்கிறார். அப்பாவிடம் எதைக்கேட்டாலும் வாங்கிக் கொடுத்துவிடுவார் என்று ஆணித்தரமாக நம்பும் பிரதிக்ஷா, ஒரு நாள் தன்னுடன் படிக்கும் நண்பரின் வீட்டுக்கு செல்கிறார்.
அப்பொழுது சொந்த வீட்டில் வாழவேண்டும் என்ற ஆசை அவளுக்கு ஏற்படுகிறது. இதனை தனது அப்பாவிடம் கூறினால் தனக்காக செய்துவிடுவார் என்று எண்ணி தனது ஆசையை தெரிவிக்கிறாள். முருகதாசும் மகளிடம் நம்பிக்கை கொடுத்துவிட்டு, நிறைவேற்ற முடியாமல் திணறுகிறார்.
இதனால் தனது மகளுடன் இருந்து விலகி இருக்கும் அவலம் ஏற்படுகிறது. இறுதியில் தனது மகளின் ஆசையை முருகதாஸ் நிறைவேற்றினாரா? மகளின் ஆசை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
எதார்த்த தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் முருகதாஸ், அந்த கதாப்பாத்திரத்தை தாங்கி நிறுத்துகிறார். சாமானியனின் வாழ்க்கையை நடிப்பின் மூலம் எதார்த்தமாக பிரதிபலிக்கிறார்.
குழந்தையாக நடித்திருக்கும் பேபி பிரதிக்ஷா கதையை தாங்கி பிடிக்கிறார். தன் அப்பாவிடம் ஆசையை தெரிவிக்கும் அழகான குழந்தையாக கவனிக்க வைக்கிறார்.
முருகதாசின் மனைவியாக நடித்திருக்கும் ஃப்ராங்க்ளின் கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். சில காட்சிகளில் மட்டுமே பக்ஸ் இடம்பெற்றாலும் ரசிக்க வைக்கிறார்.
சாமானியன் கதையை அழகாக வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் ஹென்றி. சாதாரண கதையாக இருந்தாலும் அதனை திரைக்கதையின் மூலம் அழகுப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார். சில காட்சிகளில் மட்டும் எதார்த்ததை மீறும்படியுள்ளது. கிளைமேக்ஸ் காட்சிகளில் விறுவிறுப்பு இல்லை.
நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு அழகு சேர்த்துள்ளது. பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் ஷங்கர் ரங்கராஜன்.
ராஜா மகள் – அழகியவள்