தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கக்கூடிய ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இசையமைப்பாளர் சாம்.சி.எஸ். பேசியதாவது, “இந்தப் படத்தில் வேலை பார்த்தது எனக்கு பெருமை. ஏனெனில் இது மிகவும் இயல்பாக அமைந்தது. இதன் கதையும் க்ளைமாக்ஸூம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் தயாளுடைய தேவை என்பதும் தெளிவாக இருந்தது. இறுதியில் படம் பார்க்கும்போது அதன் வேலை எனக்கு ஆத்மார்த்தமாக இருந்தது.
நடிகர் சென்றாயன் பேசியதாவது, ” நான் சினிமாவுக்குள் வந்ததே சரத்குமார் சாரை பார்த்த தான். இந்த படத்தில் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக என்னை குருடனாக நடிக்க வேண்டும் என இயக்குநர் சொன்னார். நடிக்கும்போதே எனக்கு மிகவும் கடினமாக இருந்தது அப்படி என்றால் உண்மையாக அப்படி இருப்பவர்கள் எல்லாம் சாமி என்று தான் சொல்வேன். படம் பிரமாதமாக வந்திருக்கிறது”.
அடுத்து ‘கொன்றால் பாவம்’ படத்தின் கதாநாயகி வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, “‘கொன்றால் பாவம்’ உண்மையிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. ‘விக்ரம் வேதா’ படத்திற்கு பிறகு ஒரு மிரட்டலான இசையை இந்த படத்தில் சாம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசியதாவது, ” நான் நீண்ட நாட்கள் ஏங்கிக் கொண்டிருந்த மேடை இது. சரியான படத்தோடு வரவேண்டும் என்றுதான் இத்தனை ஆண்டுகள் காத்திருந்தேன். பல வார பத்திரிகைகள் இலக்கியங்களை அறிமுகப்படுத்தி எனக்குள் நடிப்பு ஆர்வத்தை ஏற்படுத்திய என்னுடைய அம்மாவுக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்தே வெளியிட இருக்கிறோம்.
கதையின் நாயகன் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது, ” சில படங்களில் நடித்தால் மட்டுமே நமக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும். அது போல இந்த படத்தின் கதை என்ன என்று தெரிந்த பிறகும் கூட அதிலிருந்து வெளியே வர எனக்கு கொஞ்ச நேரம் தேவைப்பட்டது. அதுவே இந்த படத்தின் வெற்றி என்று சொல்வேன். நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல படத்தில் நடித்த உணர்வு இருக்கிறது இந்த படம் மக்களிடத்தில் போய் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்”.