சொப்பன சுந்தரி விமர்சனம் – (3.25/5);

எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், லக்ஷ்மி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், மைம் கோபி, சுனில் ரெட்டி மற்றும் சிலர் நடிப்பில், உருவாகி வெளியாகியிருக்கும் படம் “சொப்பன சுந்தரி”.

கதைப்படி,

நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்தில், வெள்ளந்தி மனசு கொண்ட அம்மா (தீபா), குடித்து குடித்து பக்கவாதம் வந்துவீட்டில் இருக்கும் அப்பா, வாய் பேச முடியாத அக்கா (லக்‌ஷ்மி ப்ரியா), குடும்பத்தை கவனிக்காமல் திருமணம் செய்து கொண்டு தனிகுடித்தனம் சென்று விட்ட அண்ணன் (கருணாகரன்) என பல இன்னல்களை எதிர்கொண்டுள்ள ஒரு குடும்பமாக இருக்கிறது.

ஐஸ்வர்யா வேலை பார்க்கும் நகைக்கடையில், கூப்பன் ஒன்றில் பரிசு விழுந்ததற்காக கார் ஒன்று பரிசாக கிடைக்கிறது ஐஸ்வர்யா ராஜேஷின் குடும்பத்திற்கு. இதனால் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறது அந்த குடும்பம்.

ஐஸ்வர்யாவின் அக்காவும், அவளின் காதலனும் அந்த காரை எடுத்துச்செல்ல ஒரு விபத்து ஏற்படுகிறது. அதில் ஒருவர் உயிரிழக்கிறார். போலீசுக்கு பயந்து அந்த டெட் பாடியை காருக்குள் வைக்கிறார்கள் ஷா ரா மற்றும் லக்ஷ்மி தம்பதியினர்.

அக்காவின் திருமணத்தை இந்த காரை வைத்து முடித்துவிட திட்டமிடும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடுத்த அடியாக, கருணாகரன் அந்த காரை தனக்கு சொந்தமாக்க கேட்டு வருகிறார்.

இதனால் இவர்களுக்குள் அடிதடி ஏற்பட, போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விடுகிறது கார் விவகாரம். வழக்கை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டராக வரும் சுனில். ஐஸ்வர்யாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் விசாரணையை வேறு போக்கில் கொண்டு செல்கிறார்.

மேலும் அந்த விசாரணையில் பல திருப்பங்கள் ஏற்பட, சுனிலிடம் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தப்பித்தாரா? கார் என்ன ஆனது? லக்ஷ்மி ப்ரியா செய்த விபத்திலிருந்து எப்படி தப்பித்தார்? என்பது படத்தின் இரண்டாம் பாதி…

வழக்கம் போல், நம் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். நையாண்டி கலந்த பேச்சு வழக்கு அவரை ரசிக்க வைக்கிறது. எப்போதும் போல் “மக்கள் செல்வி” ஆகவே நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஊமையாக நடித்திருக்கும் லக்ஷ்மி கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளனர். எப்போதும் போல் அப்பாவி முகத்தோடு சிரிக்க வைக்கிறார் தீபா.

ரெடின் கிங்ஸ்லியின் நடிப்பு சலிப்பு தட்டிவிட்டது. புதிதாக முயற்சி செய்யவேண்டும்.

வில்லன் தோற்றத்தில் வரும் சுனிலின் கூடுதல் முயற்சி செய்து நடித்திருக்க வேண்டும்.

எஸ் ஜி சார்லஸ், டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இன்ஸ்பிரேஷனாக வைத்து கதை அமைத்துள்ளார் போல. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் எளிய குடும்பத்தின் உணர்வுகளையும் பேசி வெற்றி கண்டுள்ளார். பல ட்விஸ்டுகள் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் கூடுதல் நகைச்சுவை வைத்திருந்தால் மேலும் சிறப்பாக… சிரிப்பாக இருந்திருக்கும்.

சொப்பன சுந்தரி – சிரிப்பலை..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *