தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.
அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர், தயாரிப்பாளர் ரமணி ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் சக்தி ரித்விக், ஒளிப்பதிவாளர் கே. எஸ். காளிதாஸ், படத்தொகுப்பாளர் எம். தியாகராஜன், இசையமைப்பாளர் அருண் ராஜ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், அருண் பாரதி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான சுரேஷ் குணசேகரன், படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடும் பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் பி. யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் பேசுகையில், ” எறும்பு திரைப்படத்தில் பணியாற்றிய எங்களுக்கு, படம் திருப்தியளித்திருக்கிறது. வெற்றி பெறும் என நம்பிக்கையும் இருக்கிறது. தயாரிப்பாளராக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.
2018 ஆம் ஆண்டில் ‘போதை’ எனும் திரைப்படத்தை தயாரித்து, இயக்கியிருந்தேன். இந்தத் திரைப்படம் எனக்கு நிறைய அனுபவத்தை கற்றுக் கொடுத்தது. அதன் பிறகு நடிகர் சார்லியை சந்தித்து கதையை சொல்லி குறும்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டிருந்தேன். கொரோனா காரணமாக அது நிறைவேறவில்லை. அந்த தருணத்தில் தோன்றிய கரு தான் எறும்பு. இந்த கதை எனக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
மன்ட்ரூ என்பது என்னுடைய தாத்தாவின் பெயர். அவரது இயற்பெயர் தர்மலிங்கம். அவரது பெயரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பட நிறுவனத்தை தொடங்கி படத்தை தயாரித்திருக்கிறேன். சினிமாவை நம்பி உண்மையாக பணியாற்றுபவர்களை.. சினிமா ஒருபோதும் கைவிடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும்.
ஃபீல் குட் மூவிக்கும்.. எமோஷனல் எனும் உணர்விற்கும்.. தனி சக்தி உண்டு. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
என்னுடைய தயாரிப்பில் வெளியான ‘போதை’ படத்தை வெளியிடுவதற்கு ரமணி ராமச்சந்திரன் உதவி செய்தார். இந்தப் படத்திற்கும் அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இல்லையேல் நான் இல்லை.
நமக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்தி தான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தை வைத்து அக்கா -தம்பி பாசம்… அப்பா -மகன் உறவு… என பல விசயங்களை இணைத்திருக்கிறேன். நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம்.
ஒரு கிராம் மோதிரம் தொலைந்து விட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள். இதுதான் கதை. ” என்றார்.