யோலோ என்ற யூடியூப் சேனல் வைத்துக் கொண்டு, மக்களிடம் ப்ராங்க் வீடியோ எடுத்து தனது பிசினஸை நடத்தி வருபவர் நாயகன் தேவ். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் தேவிகா. தேவிகாவின் தந்தையான படவா கோபி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். பெண் பார்ப்பதற்காக வருகிறது விஜே நிக்கியின் குடும்பம். ஆனால், தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே. பிறகு எதற்கு திருமணம் என்று குண்டை தூக்கி போடுகிறார். இதனைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைகிறது தேவிகாவின் குடும்பம். தான் யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று அடித்து கூறுகிறார் தேவிகா. விடாமல் திருமணம் நடந்து விட்டது என்றும், இவரது கணவன் தேவோடு ஹனிமூன் வந்திருந்த போது தான் இவர்களை சந்தித்ததாகவும் கூறுகிறார் நிக்கியின் சகோதரி.
ஆனால், தனக்கு அப்படியாக எதுவும் ஞாபகமில்லை என்றும், யார் அந்த தேவ் என்று தேடி அலைகிறார் தேவிகா. இறுதியாக தேவ் அவரை கண்டுபிடிக்கிறார் தேவிகா. தேவிற்கும் அப்படியான திருமணம் எதுவும் நடக்கவில்லை என்று கூற, சாட்சிகள் அதிகம் இருப்பதாகவும் மேலும், இவர்களது திருமணம் பதிவு செய்யப்பட்டிருப்பதையும் அறிகிறார்கள்.
தங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைகின்றனர் தேவும் தேவிகாவும்.
இறுதியில், அது எப்படி என்று இருவரும் கண்டுபிடித்தார்களா? இவர்களுக்கு இடையே காதல் வந்ததா? அது கைகூடியதா என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா இருவரும் கதைக்கேற்ற ஜோடிகளாக படம் முழுக்கவே ஜொலித்தாலும், படத்தில் மிகப்பெரும் வேகத்தடையே விஜே நிக்கியின் கதாபாத்திரம் தான். இந்த கதாபாத்திரம் படத்திற்கு தேவையா? என்று சற்று அதிகமாகவேக யோசிக்க வைத்திருக்கிறது.
டார்லிங் படத்தில் வந்த ஒரு கதையை இப்படத்தில் மீண்டும் படமாக்கியிருக்கிறார்கள். தேவ் மற்றும் தேவிகாவிற்கு எப்படி திருமணம் நடந்தது என்பதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேவ் தன் கண்முன்னே நடக்கும் கொலைக்கும் அவருக்கும் எப்படி பொறுப்பாக முடியும்? அதை அவர் மறுக்காமல் இருப்பது ஏன் என்று காட்சி விளக்கம் இல்லை. இதுபோன்ற பல கேள்விகள் எழுகிறது. எந்த கதாபாத்திரத்தையும் சீரியஸாக இல்லாமல் இருந்தது படத்திற்கு மைனஸ். நகைச்சுவை காட்சிகளை சரியாக பயன்படுத்தியிருக்கலாம். கோமாவில் இருந்த வில்லி திடீரென எழுந்து ஓடுகிறார், வில்லன் பலவீனமாக இருக்கிறார்.
இசை மற்றும் ஒளிப்பதிவு பணிகளை சரியாக செய்திருக்கின்றனர். இருந்தாலும், பாடல்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இயக்கம்: எஸ் சாம்
கதை: ராம்ஸ் முருகன்
திரைக்கதை: சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
இசை: சகீஷனா சேவியர்
ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்பு: ஏ எல் ரமேஷ்
தயாரிப்பு: மகேஷ் செல்வராஜ் (MR Motion Pictures)
நடிகர்கள்: தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், ப்ரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைகுமார், நித்தி,
யோலோ – லாஜிக் இல்லா மேஜிக்