வித் லவ் – திரை விமர்சனம் 3.5/5

திருமணத்திற்காக பெண் பார்க்கும் படலத்தில் இருக்கிறார் அபிஷன் ஜீவிந்த். பார்க்கும் பெண்களை ஒவ்வொருவராக ஏதாவது ஒரு காரணம் சொல்லி மறுத்துக் கொண்டே வருகிறார் அபிஷன்.

இந்த நிலையில், புகைப்படம், பெயர் என எந்த விவரமும் சொல்லாமல் நாயகி அனஸ்வரா ராஜனைப் பெண் பார்க்க காபி ஷாப் ஒன்றிற்கு செல்லுமாறு அபிஷனிடம் கூறுகிறார் அவரது அக்கா.

அங்கு அனஸ்வரா ராஜனை சந்திக்கும் அபிஷன், ஆரம்பத்தில் சாதாரணமாக அறிமுகம் செய்து கொண்டு பேசத் தொடங்குகிறார். ஆனால் உரையாடல் நகரும் போதே, அனஸ்வரா, அபிஷன் படித்த பள்ளியில் அவருக்கு முன் படித்த சீனியர் என்பது தெரிய வருகிறது. அதன்பின் இருவருக்குள்ளும் ஒரு இனிய நெருக்கம் உருவாகிறது.

தங்களது கடந்த கால காதல் அனுபவங்களை இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள். பள்ளி நாட்களில் நடந்த ஒரு தலை காதலை நினைவுகூரும் போது, அந்த எக்ஸ் காதல் இவர்களின் மனநிலையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? இந்த ஜோடி இணைந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கான விடையை இயக்குனர் படத்தின் இரண்டாம் பாதியில் அழகாக வைத்திருக்கிறார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, அதிலேயே சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் அபிஷன். அதன் பிறகு, அறிமுக இயக்குனர் மதன் இயக்கத்தில் ‘வித் லவ்’ படத்தின் மூலம் ஹீரோவாக முன்னணி இடத்திற்கு வந்திருக்கிறார்.

கதையின் நாயகனாக அபிஷன் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்புத் திறமையை நம்பிக்கையுடன் வெளிப்படுத்தியுள்ளார். ‘லவ் டுடே’ மூலம் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய பிரதீப் ரங்கநாதன் போல, ‘வித் லவ்’ படத்தின் மூலம் அபிஷனும் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து ரசிகர்களின் மனதில் எளிதாக இடம் பிடித்துள்ளார்.

காதல் காட்சிகள், துறுதுறுப்பான நடிப்பு, உணர்ச்சி வெளிப்பாடு என பல பரிமாணங்களில் அபிஷன் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு இணையாக நாயகி அனஸ்வரா ராஜனும் அழகான, இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

அபிஷன் – அனஸ்வரா இடையேயான கெமிஸ்ட்ரி திரையில் நன்றாகவே வேலை செய்துள்ளது. இருவரும் சேர்ந்து பயணிக்கும் அந்த எளிமையான தருணங்களே படத்தின் பெரிய பலமாக மாறியுள்ளன. அனஸ்வராவின் அழகும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தில் நடித்துள்ள காவ்யா, குறுகிய காட்சிகளில் தோன்றினாலும் தேவதை போன்ற அழகும் அனுபவமான நடிப்பும் கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார். அபிஷனுடன் பேசும் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. சரவணன் சில காட்சிகளிலேயே தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் தேனி முருகன், ஹரீஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் இயக்குனரின் தேவைக்கேற்ப அளவான நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. பல இடங்களில் கதையை விட பின்னணி இசையே அதிகமாக பேசுகிறது. பாடல்களும் மனதை வருடுகின்றன.

ஸ்ரேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குறிப்பாக பாடல் காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

முதல் பாதி வழக்கமான தமிழ் சினிமா போல் செல்கிறது என நினைக்கும் நேரத்தில், இரண்டாம் பாதியில் ரூட்டை மாற்றி முற்றிலும் வேறு ஒரு உலகத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் இயக்குனர் மதன். காமெடி, சென்டிமெண்ட், காதல் ஆகியவற்றை சமநிலையில் வைத்து கதையை அழகாக நகர்த்தியுள்ளார்.

இன்றைய இளம் தலைமுறையை எளிதில் கவரும் வகையில் கதையை சுறுசுறுப்பாகவும் நச்சென்றும் சொல்லியுள்ளார் மதன். தமிழ் சினிமாவில் மதனுக்கென ஒரு தனி அடையாளம் இந்த படத்தின் மூலம் உருவாகியிருப்பது சந்தோஷமான விஷயம்.

நடிகர்கள்: அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் , ஹரீஷ், சச்சின், காவ்யா

தயாரிப்பு: Zion Films & MRP Entertainment

தயாரிப்பாளர்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்த், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான்

இசை: ஷான் ரோல்டன்

படத்தொகுப்பு: சுரேஷ்

ஒளிப்பதிவு: சுரேஷ் கிருஷ்ணா

மொத்தத்தில்,

‘வித் லவ்’ – அழகான ஒரு எக்ஸ் காதல் கதை.