ஆர் கே சுரேஷ், பூர்ணா, பக்ஸ், இளவரசு, மாரிமுத்து, கணேஷ், மது ஷாலினி நடிப்பில், ஜி வி பிரகாஷ் இசையில், எம். பத்மகுமார் இயக்கத்தில் இயக்குனர் பாலா தயாரித்து வெளியிட்ட படம் “விசித்திரன்”. “ஜோசப்” என்னும் மலையாள படத்தின் ரீமேக் தான் இந்த படம்.
கதைப்படி,
ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மாயன்(ஆர் கே சுரேஷ்). தான் பணியில் இருக்கும் போது ஒரு கொலை வழக்கை ஆய்வு செய்கிறார் அப்போது அங்கிருக்கும் தன் காதலியின்(மது ஷாலினி) சடலத்தை கண்டு ஸ்தம்பித்து போகிறார். அந்த காதலியின் நினைவால் தன் மனைவி மற்றும் மகளை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
பல ஆண்டுகள் கழித்து மாயனின் மனைவியான ஸ்டெல்லா (பூர்ணா) சாலை விபத்து ஏற்பட்டு மூளைச் சாவு அடைகிறார். அப்போது அது விபத்து இல்லை, திட்டமிட்ட கொலை என்று கணித்த அவர் தன் மனைவியின் கொலை வழக்கை விசாரிக்க ஆரம்பித்த அவருக்கு தன் மகளின் இறப்பிலும் சந்தேகம் கொண்டு இருவரின் இறப்பை பற்றியும் விசாரிக்க துவங்குகிறார்.
அதன் பின் அவர்களின் கொலைக்கு காரணம் யார் என்று கண்டு பிடித்தாரா? அதை தகுந்த சாட்சிகளுடன் நிரூபித்தாரா? என்பது மீதி கதை…
நடிப்பில்,
ஆர் கே சுரேஷ் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் ஒரு கதையின் வலுவை எவ்வாறு தாங்கி பிடிப்பார் அவரின் முழு திறமை என்னவென்று திரையுலகிற்கு நிரூபித்துள்ளார். செண்டிமெண்ட் காட்சி, விசாரணை காட்சி அனைத்திலும் மாயன் கதாபாத்திரத்தின் எதார்த்தம் தெரிந்தது.
பூர்ணா பல ஆண்டுகள் கழித்து தமிழில் ஒரு அழகான நடிப்பை அவர் வந்த அனைத்து காட்சிகளிலும் நடித்துள்ளார்.
மதுஷாலினி, பக்ஸ், மாரிமுத்து, இளவரசு, என அனைவரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை புரிந்து நடித்துள்ளனர்.
இயக்கத்தில், எம். பத்மகுமார் மூல படமான “ஜோசப்” படத்தின் வலி குறையாமல் இயக்கியுள்ளார். அவர் தேர்வு செய்த கலைஞர்கள் அனைவரும் பொருத்தமாக இருந்தார்கள் என்றே குறிப்பிடலாம்.
ஜி வி பிரகாஷ் தனது இசையின் அனுபவத்தை இப்படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார்.
மொத்தத்தில் “ஜோசப்” படத்தை பார்த்தவர்களுக்கு “விசித்திரன்” தமிழில் மொழி மாற்றப்பட்ட படமாக இருக்கும். “ஜோசப்” படத்தை பார்க்கத்தவர்களுக்கு “விசித்திரன்” புது அனுபவமாகவும், உணர்வு பூர்வமான ஒரு திரைப்படமாகவும் இருக்கும்.
விசித்திரன் – வலிமையான வலியை உணர்த்தும் படம்.