வெஞ்சன்ஸ் – திரை விமர்சனம் 3/5

பள்ளியில் படிக்கும் வேணி, தனது பெயரை கூட சக தோழிகள் அறிந்திருக்கவில்லை என்று நினைத்து கவலைப்படுகிறார். அப்போது தந்தையாக வரும் காளி வெங்கட், “நீ மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தால் உன்னை மாநிலமே கொண்டாடும்” என்று ஊக்கமளிக்கிறார். அதன்படி வேணி அயராது உழைத்து படித்து மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுகிறார்.

மாநிலம் முழுவதும் வேணியின் பெயர் ஒலிக்கிறது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு அனைவரும் அதை மறந்து தங்கள் வழக்கமான வேலைகளை பார்க்கத் தொடங்கியபோது, அதை வேணியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவரும் தொடர்ந்து தன்னைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் உருவாகிறது.

அதற்காக அவள் தொடர்ந்து படித்து, 12ஆம் வகுப்பிலும் முதலிடம் பெற்று, பின்னர் ஐஏஎஸ் தேர்விலும் முதலிடம் பெற்று மாவட்ட கலெக்டராக ஆகிறார்.

அதற்குப் பிறகும் தொடர்ந்து பல நல்ல செயல்களை செய்து, தினமும் தனது பெயர் பத்திரிகைகளில் வரும்படி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் வேணி.

இவ்வாறு தொடர்ச்சியாக செயல்பட்டு வந்த வேணி, ஒரு கட்டத்தில் ஆளுங்கட்சியினரால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார். இதற்கிடையில் மத்திய அரசு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறது.

தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை வேணி எவ்வாறு எதிர்கொண்டார்? மத்திய அரசு மற்றும் மாநில அரசு மோதலை அபர்ணதி எவ்வாறு சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக் கதை.

2040 ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு கதை நகர்கிறது. தமிழ்நாடு என்பதற்கு பதிலாக ‘தாய்நாடு’ என்றும், தஞ்சாவூர் என்பதற்கு பதிலாக ‘காவேரி மாவட்டம்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது இயக்குனரின் சிந்தனையை காட்டுகிறது. நிகழ்கால அரசியல்வாதிகளை ஒத்த கதாபாத்திரங்களை கொண்டு முழு படத்தையும் இயக்கியுள்ளார் இயக்குனர்.

மறைந்த தலைவர்களும், வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களும் என அனைவரையும் கண் முன்னே கொண்டு வர முயற்சித்துள்ளார். ஆனால் ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை எல்லாம் தாண்டி, அவர் நினைத்ததை எல்லாம் செய்யக்கூடிய வகையில் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பது சற்று அதிகப்படுத்தப்பட்டதாக தோன்றுகிறது.

ஒரு கலெக்டரின் முதல் கடமை சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ளாமல், முறையான நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த படத்தில் பல இடங்களில் கதை முழுவதும் சினிமாத்தனமாகவே நகர்வது சிலருக்கு சற்று எதிர்ப்பை உருவாக்கலாம்.

படத்தில் அபர்ணதி தொடர்ந்து ஸ்லோ மோஷனில் நடந்து வருவது போன்ற காட்சிகள் அதிகமாக இடம் பெற்றுள்ளன. சில காட்சிகள் இருந்தால் பரவாயில்லை; ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் இது தொடர்வது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

அதே நேரத்தில் பின்னணி இசையில் மாஸ் உணர்வை கொடுக்க முயற்சித்துள்ளார் இசையமைப்பாளர். ஜான் விஜய், இளவரசு, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட நடிகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சரியாக செய்துள்ளனர்.

பட்ஜெட் குறைவாக இருந்ததால் பெரிய காட்சிகளாக இருக்க வேண்டிய சில சீன்களை சிறிய காட்சிகளாக அமைத்து பெரிதாக காட்ட முயற்சித்துள்ளனர். ஆனால் அது முழுமையாக பலன் அளிக்கவில்லை.

பல சம்பவங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டு அமைந்ததால், பார்வையாளர்கள் கதைக்குள் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்படுகிறது.

இசையும் ஒளிப்பதிவும் சராசரி அளவில் உள்ளது.

ராகுல் அசோக் அவர்களின் இயக்கத்தில் ஏசி புரோடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அபர்னதி, இளவரசு, ஜான்விஜய், லிவிங்ஸ்டன், ஒய் ஜி மகேந்திரன், காளி வெங்கட், சரவணா சுப்பையா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் வெஞ்சன்ஸ்

இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கார்த்திக் ராஜா. ஒளிப்பதிவு செய்திருக்கிறார் எம் எஸ் பிரபு. படத்தொகுப்பு செய்திருக்கிறார் இம்ரான். பின்னணி இசை அருண் ராஜ் கொடுத்திருக்கிறார்.

வெஞ்சன்ஸ் – கற்பனை.