என்ன செய்தாவது குடிக்க வேண்டும் என்று தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் நாயகன் கஜேஷ் நாகேஷ். இவர் மீது நாயகி ரித்விகா ஸ்ரேயா அளவு கடந்த காதலை வைத்திருக்கிறார். ஆனால், கஜேஷ் காதலை விட தனக்கு மது தான் முக்கியம் என்று மது மோகத்தில் அலைந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது கஜேஷை திருத்தி தனது காதல் வலையில் விழ வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார் ரித்விகா. பல்வேறு முயற்சிகளை எடுக்கும் நாயகி ரித்விகாவிற்கு, எந்த பலனும் அளிக்காததால், விபரீத முடிவு ஒன்றை எடுத்து படம் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறார்.
அது என்ன முடிவு என்பது தான் திரைப்படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான கஜேஷ் நாகேஷ், கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். மாதுவை விட மதுதான் முக்கியம் என்று அவர் வசனங்களால் கூறாமல், தனது நடிப்பால் கதையின் மூலக்கருவை மிக அழகாக கடத்திச் சென்றிருக்கிறார். இருப்பினும் நடிப்பில் இன்னும் சற்று கவனம் தேவை என்றும் கூற வைத்து விட்டார் நடிகர் கஜேஷ். அழகாலும் நடிப்பாலும் நன்றாகவே கவர்ந்திருக்கிறார் நாயகி ரித்விகா. பாடல் காட்சி மற்றும் க்ளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்கள் என அனைத்திலும் தன்னால் முடிந்த ஒரு நடிப்பைக் கொடுத்து அனைவராலும் பாராட்டினையும் பெற்றுச் செல்கிறார்.
நகைச்சுவைக்காக நடிகர் மொட்டை ராஜேந்திரனை சரியாக பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர். மூன்று பொண்டாட்டி கட்டிக் கொண்ட மொட்டை ராஜேந்திரன், ஆங்காங்கே காமெடியிலும் கலகலப்பாக்கி காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்.
3 மனைவிகளாக நடித்திருந்த அஸ்மிதா, ஹேமா, சின்னாலம்பட்டி சுகி மூவரும் காட்சிகளுக்கு கச்சிதமாகவே பொருந்தியிருந்தனர். பாவா லட்சுமணன், சேரன் ராஜ், மிப்பு, நடேசன், அங்காடித்தெரு கருப்பையா உள்ளிட்ட நடிகர்களும் கதைக்கேற்ற கதாபாத்திரங்களை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார்கள். நாயகி ரித்விகாவின் தந்தையாக தயாரிப்பாளர் பத்ம ராஜு ஜெய்சங்கர் நடித்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்திலேயே தனது வில்லத்தனத்தை பார்வையாளர்களிடம் கடத்திச் சென்றிருக்கிறார்.
சமூக அக்கறையோடு ஒரு க்ளைமாக்ஸை கொடுத்து கண்கலங்க வைத்த இயக்குனருக்கு பாராட்டுகள். அதற்காகவே இயக்குனருக்கு பெரிய சலாம் போடலாம்.
க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. அதே சமயம் படத்தில் பல சறுக்கல்களும் இருக்கிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கான இடம் நிறைய இருந்தும் இயக்குநர் பயன்படுத்தாமல் தவற விட்டிருக்கிறார்.
திரைக்கதை மற்றும் காட்சிப்படுத்துதலை இன்னும் அழுத்தமாக கொடுத்திருக்கலாம். தனது ஒளிப்பதிவை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். அருணகிரி இசையில் பாடல்கள் கேட்கும் படியாக இருக்கிறது. கார்த்திக் கிருஷ்ணனின் பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணம் புரிய வைத்திருக்கிறது.
உருட்டு உருட்டு – குடிக்காதே, திருந்து திருந்து