சென்னையில் புதிய மருத்துவமனையை பிரசிடெண்ட் அபூபக்கர் தொடங்கி வைத்தார்!
சென்னை ராயப்பேட்டை, லாயிட்ஸ் சாலையில் ஆல் இஸ் வெல் என்ற புதிய மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஷகில் முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த மருத்துவமனை திறப்பு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்ட நிகழ்வில், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மருத்துவமனையை துவங்கி வைத்தார். மிகக் குறைவான கட்டணத்தில் கைராசியான மருத்துவர் என்று பெயர் பெற்ற ஷகில் தற்போது பிரம்மாண்ட மருத்துவமனையை உருவாக்கி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் இன்னும் அவரது வளர்ச்சி மிக பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்றும் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறுபான்மை மக்களுக்கு, தலித் மக்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, பார்சி இனத்தவர்களுக்கு என்று மத்திய அரசின் நிதி உதவி அதிக அளவில் இருக்கிறது இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களோடு அன்பும் பாசமும் கொண்டு பேசிப் பழகி வந்தால் சமத்துவமும் சகோதரத்துவமும் இந்த மண்ணில் நிலைக்கும் என்றார். குழந்தைகளுக்கு மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டக்கூடாது என்ற சிந்தனையை வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை, மதங்களை கடந்து மனங்கள் இணைந்தால் மிகப்பெரிய வளர்ச்சியும் மகிழ்ச்சியும் இந்த மண்ணில் நிலைக்கும் என்றும் அபூபக்கர் குறிப்பிட்டார்.