படத்தின் கதை 2002 ஆம் ஆண்டில் நகர்கிறது. வேலூர் மாவட்டத்தில் ஆயுதப் படையில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார் விக்ரம் பிரபு. கைதிகளை சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை செய்து வரும் விக்ரம் பிரபு, ஒரு குற்றவாளியை அழைத்துச் செல்லும்போது அவர் தப்பிக்க முயற்சிக்கிறார். இதனால் அவரை சுட்டு தள்ளுகிறார் விக்ரம் பிரபு.
இதன் காரணமாக விக்ரம் பிரபு மீது பணி ரீதியாக விசாரணை நடக்கிறது. இந்த சூழலில் மேலும் ஒரு விசாரணை கைதியான அக்ஷய்குமாரை வேலூர் சிறையில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பணியை செய்கிறார் விக்ரம் பிரபு. இவருடன் இரண்டு கான்ஸ்டபிள் உடன் செல்கின்றனர். இரவு நேர பயணம் என்பதால் அரசு பேருந்தில் அக்ஷய குமாரை கையில் விலங்கிட்டு அழைத்துச் செல்கின்றனர். செல்லும் வழியில் உணவிற்காக பேருந்து நிற்கும் பொழுது அங்கு சிறு கலாட்டா ஏற்பட மூன்று காவலர்களை விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு விடுகிறது.
இதனால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படும் அக்ஷய்குமார் மூன்று பேரும் பிடியிலிருந்து தப்பித்து விடுகிறார். இறுதியில் அக்ஷய்குமார் பிடிபட்டாரா இல்லையா.? இவர் மீது ஏன் கொலை குற்றம் பாய்ந்தது .?அதற்குப் பின் என்ன நடந்தது ?? என்பதை படத்தின் மீதி கதை.
விக்ரம் பிரபு கதிரவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இல்லாத வித்தியாசமான கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் விக்ரம் பிரபு. டாணாக்காரன் படத்திற்கு பிறகு மிகப்பெரும் நடிப்பாற்றலை இந்த படத்தின் மூலம் விக்ரம் பிரபுவிடம் காண முடிந்தது.
படம் முடித்து வெளியே வரும்போது கதிரவன் என்ற கதாபாத்திரத்தை நமது மனதிற்குள் ஆழமாக பதிய வைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார் விக்ரம் பிரபு. ஒவ்வொரு காட்சியிலும் அதற்கான கடின உழைப்பு கொடுத்திருக்கிறார்.
தயாரிப்பாளரின் மகனான அக்ஷய் குமார் படத்தின் மிக முக்கிய பில்லராக அப்துல் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மிகவும் அப்பாவித்தனமான முக பாவனைகளை கொடுத்து ஒவ்வொரு காட்சியையும் நன்றாகவே கடத்திச் சென்றிருக்கிறார்.
காதலியின் மேல் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும் காட்சியில் ஸ்கோர் செய்திருக்கிறார் அக்ஷய். அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்க்கும் அனைவரின் கண்களையும் குளமாக்கி விட்டார் அக்ஷய் குமார். காதலியாக நடித்த அனிஷ்மா அனில் குமார் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கிறார். மலையாளத்தில் இருந்து வந்த புதுவரவு. தனது சிரிப்பாலே அனைவரின் மனதையும் கவர்ந்து விடுகிறார்.
முதல் பாதியில் இருந்த சிரிப்பும் இரண்டாம் பாதியில் இதயத்தை ரணமாக்கும் நடிப்பும் கொடுத்திருக்கிறார் அனிஷ்மா. தொடர்ந்து சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் தங்களது இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்கள். ஹீரோயினியின் அக்காவாக நடித்திருந்தவர் அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல், அக்ஷய குமாரின் அம்மாவாக நடித்தவர், அனிஷ்மாவின் மாமாவாக நடித்தவர், அவரது தந்தையாக நடித்தவர்,போலீஸ் கான்ஸ்டபிள் அனைவருமே மிக தத்ரூபமான ஒரு நடிப்பை கொடுத்திருந்தனர். இவர்கள் அனைவருமே மனதிற்குள் ஆழமாக பதிந்துவிட்டனர்.
மிகவும் நுணுக்கமான ஒரு கதையை கையில் எடுத்த தமிழ், அதை சரியான ஒரு இயக்குனரிடம் ஒப்படைத்து இருக்கிறார், பாராட்டுகள்.
வெற்றிமாறனின் உதவி இயக்குனரான சுரேஷ் ராஜகுமாரி, இப்படத்தை மீக தெளிவான திரைக்கதையோடும் நகர்த்திச் சென்று நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து பரபரப்பை உருவாக்கியிருக்கிறார். அடுத்து என்ன நடக்கும் என்ற ஒவ்வொரு காட்சியிலும் பதபதைக்க வைத்திருக்கிறார். இறுதியில் இது நடந்து விடக்கூடாது என்ற பதட்டத்தை கொடுத்திருக்கிறார். இறுதியில் விக்ரம் பிரபு கூறிய மெசேஜ் ஒவ்வொரு காவலருக்குமானது மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டானது. படத்தினை முடிக்கும் போது எழுந்து நின்று கைதட்டல் வாங்கும் அளவிற்கு சிறந்த படைப்பாக ”சிறை” வாகை சூடி விட்டது.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் அருமை. பின்னணி இசை கதையோடு சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறது. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரும் பலம் திரைக்கதையின் வேகத்திற்கு ஒளிப்பதிவு இணையான வேகத்தில் பயணிக்கிறது.
பிலோமின் ராஜ் எடிட்டிங் கனகச்சிதமாக காட்சிகளை இணைக்கிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியை எடிட் செய்த விதம் சூப்பர்.
சுரேஷ் ராஜகுமாரி அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அக்ஷய் குமார், அனிஷ்மா அனில் குமார், ஆனந்த தம்பி ராஜா உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம்தான் ”சிறை”.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மாதேஷ் மாணிக்கம். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.
படத்தொகுப்பு செய்திருக்கிறார் பிலோமின் ராஜ். டாணாக்காரன் படத்தின் இயக்குனர் தமிழ் அவர்களின் கதையில் இப்படம் உருவாகி இருக்கிறது.
பிரபல தயாரிப்பாளரான லலித் குமார் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
சிறை – விறுவிறுப்பு

