நாயகன் உதயா தீப், தனது மாமன் மகள் கவிதா சுரேஷை காதலிக்கிறார். கவிதா சுரேஷும் உதயாவை காதலிக்கிறார். ஆனால், கவிதாவின் அப்பாவான ப்ரேம் கே சேஷாத்ரி இந்த காதலை ஏற்க மறுக்கிறார்.
தன் அப்பாவை ப்ரேம் கே சேஷாத்ரி தான் கொன்றார் என்றும் உதயா நினைத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஒருநாள் விபத்து ஒன்றில் சிக்கி ப்ரேம் கே சேஷாத்ரி இறந்துவிடுகிறார்.
இறுதி சடங்கு செய்வதற்காக வீட்டிற்கு உடலை எடுத்து வருகின்றனர். இரவானதும் உடலை பார்க்க சொல்லி உதயாவிடம் பொறுப்பைக் கொடுத்து, அனைவரும் தூங்கி விடுகின்றனர்.
உதயாவும் அலுப்பில் சற்று அசந்து விட, உடலை யாரோ எடுத்துச் சென்று விடுகின்றனர். சற்று நேரத்தில் இறந்தவர் உடல் இல்லை என்றதும் அந்த இடமே பரபரப்பாகிறது. உதயாவை அனைவரும் சந்தேகிக்கின்றனர். இதனை விசாரிக்க வருகிறார் இன்ஸ்பெக்டரான ஆதேஷ் பாலா.
தனது மாமா உடலை ஆதேஷ் பாலா கண்டுபிடித்தாரா? உதயா – கவிதா இருவரும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான உதயா தீப், தனது கேரக்டரை கலகலப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார். எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், அலட்டிக் கொள்ளாத நடிப்பால் அனைவரையுமே கவர்கிறார். ஒரு சில இடங்களில் கதாபாத்திரத்தின் வலிமைக்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்.
2வது கதாநாயகனாக தனக்கான கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார் ஆதேஷ் பாலா. இந்த கதைக்கு இந்த கதாபாத்திரத்திற்கு இது போதும் என அறிந்து அளவாக கொடுத்திருக்கிறார் ஆதேஷ் பாலா.
நாயகி கவிதா சுரேஷ், தனக்குக் கொடுக்கப்பட்டதை அழகாக செய்திருக்கிறார். படத்தில் நடித்த மற்ற நடிகர்களும் தங்களது கேரக்டர்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கின்றனர். ஆங்காங்கே காமெடி காட்சிகள் படத்திற்கு நல்லாவே கைகொடுத்திருக்கிறது. பிணத்தை காணவில்லை என்ற மையப்புள்ளியை கையில் எடுத்து அதை அழகாக திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இருப்பினும் காமெடியில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாம். பிணத்தை எடுத்து சென்றது யார்? க்ளைமாக்ஸ் காட்சி இரண்டுமே படத்தில் பெரிய ட்விஸ்ட் தான். இந்த பிரச்சனை எல்லாம் எதனால் ஏற்படுகிறது என்று கொடுத்த விளக்கத்திற்கு இயக்குனருக்கு சபாஷ்.
ப்ரேம் கே சேஷாத்ரியின் மூத்த சகோதரராக வருபவர் எப்படி இறந்தார் என்பது காமெடியில் சற்று அசத்தல்தான்..
இசை மற்றும் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
எழுத்து & இயக்கம்: ஆண்டனி அஜித்
நடிகர்கள்: உதயா தீப், ஆதேஷ் பாலா, ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ப்ரேம் கே சேஷாத்ரி.
இசை : சரண் ராகவன் & விஜே ரகுராம்
ஒளிப்பதிவு : பூபதி வெங்கடாசலம்
தயாரிப்பு: ஆண்டனி அஜித் ப்ரொடக்ஷன்ஸ்
சாவீ – காமெடி ஆயிரம் வாலா சரவெடி

