சாரா – திரை விமர்சனம் 3/5

கட்டுமானம் செய்யும் தனியார் நிறுவனத்தில் இஞ்சினியராக பணியாற்றி வருகிறார் சாக்‌ஷி. இவரது தந்தையாக பொன்வண்ணன் வருகிறார். அதே கம்பெனியில் வேலை பார்க்கும் விஜய் விஸ்வாவுடன் இன்னும் இரு தினங்களில் திருமணம் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து வரும் நேரத்தில் திருமண தடங்கல்கள் அடிக்கடி நிகழ்கிறது. இதனால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன சங்கடங்கள் ஏற்படுகிறது.

வேலை பார்க்கும் நிறுவனத்தில் முறைகேடு செய்யும் மிரட்டல் செல்வா, சாக்‌ஷிக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். அதுமட்டுமல்லாமல், பில்டர்ஸ் நிறுவனத்தில் வாட்ச் மேனாக வேலைபார்க்கும் ரோபோ சங்கரிடம் சாக்‌ஷியை கொலை செய்ய சொல்கிறார் மிரட்டல் செல்வா. அதே நிறுவனத்தில் யோகிபாபு, தங்கதுரை மற்றும் செல்லக்குட்டி வேலை பார்க்கின்றனர்.

சாக்‌ஷியும் செல்லக்குட்டியும் பள்ளி பருவத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், நீண்ட வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொள்ள, சாக்‌ஷிக்கு திருமண ஏற்பாடு நடந்து கொண்டிருப்பது தெரியாமலேயே அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார் செல்லக்குட்டி.

இந்நிலையில், சாக்‌ஷியை கடத்த முயற்சிக்கிறார் செல்லக்குட்டி. செல்லக்குட்டியின் காதல் எல்லை எதுவரை சென்றது? சாக்‌ஷி – விஜய் விஷ்வா திருமணம் நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

ரோபோ சங்கர் மற்றும் தங்கதுரையின் காமெடி இடைவிடாமல் சிரிக்க வைத்தது படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். இயக்குனரான செல்லக்குட்டி, இப்படத்தில் பலமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் தான் இப்படத்தின் ஹீரோவாக படம் முழுவதும் வலம் வருகிறார். ஆனால், நடிப்பில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸ் காட்சியில் ஓவர் ஆக்டிங் கொடுத்து காட்சிகளில் சற்று சறுக்க வைக்கிறது.

சாக்‌ஷி அனுபவ நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். அழகாகவும் படத்தில் காட்சி தந்திருக்கிறார். பொன்வண்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்ட அனுபவ நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்து முடித்திருந்தனர்.

நல்ல கதையை எடுத்த இயக்குனர், அதை திரைப்படுத்துவதில் இன்னும் சற்று கவனமாக இருந்திருக்கலாம். காட்சிகளை ஒருங்கிணைக்கும் விதம், திரைக்கதையில் பரபரப்பு என இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனித்திருந்திருக்கலாம். தாய்க்காக வந்த செண்டிமெண்ட் காட்சிகள் சற்று ஆறுதல்.

இசை மற்றும் ஒளிப்பதிவு சராசரி.

தயாரிப்பு நிறுவனம் : Viswa Dream World

தயாரிப்பாளர் : ஸ்ரீ பட்டவன்

நடிகர்கள் : சாக்‌ஷி அகர்வால் , இயக்குநர் செல்லகுட்டி ,யோகி பாபு, தங்கத்துரை, ரோபோ சங்கர், விஜய் விஸ்வா, அம்பிகா, மிரட்டல் செல்வா

எழுத்து – இயக்கம் – செல்லகுட்டி

இசை – கார்த்திக் ராஜா

ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன் குமார் MFI

படத் தொகுப்பு – ஜான் ஆபிரகாம்

சாரா – கவன குறைவு