ஆர்.மாதவன் இயக்கி நடித்து, சூர்யா, சிம்ரன், ரவி ராகவேந்திரா, மிஷா கோபால், கார்திக் குமார், ஜெகன் மற்றும் பலர் நடிப்பில், சாம் சி எஸ் இசையில் மிக பிரமாண்டமாக உருவான படம் “ராக்கெட்ரி- நம்பி விளைவு”
பத்ம பூஷன் இஸ்ரோவின் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கையை பேசும் படம் இது.
மேற்கத்திய நாட்டு ராக்கெட்டுகள், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் தங்களைத் தாங்களே செலுத்துவதற்கு உதவும் மூன்று இயந்திரங்களான (திட, திரவ மற்றும் கிரையோஜெனிக்) ஆகியவை இந்திய ராக்கெட்டுகளில் இல்லை. அதற்கு பல நூறு கோடிகள் வேண்டும். ஆனால், அமெரிக்கா பல்கலையில் உதவித் தொகை மூலம் ராக்கெட்டின் திட நிலையைப் பயில தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், இவருக்கு திரவம் கற்றுக் கொள்ளத்தான் விருப்பம். அதையும் வெற்றிகரமாக கற்றுக் கொண்டு வருகிறார்.
பின்னர், அதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு குறிப்பிட்ட ஒரு ராக்கெட் என்ஜினை பற்றி அறிந்து கொள்ள 52 இந்திய விஞ்ஞானிகளுடன் பிரான்ஸ் நாட்டிற்கு பயணிக்கிறார்.
அங்கு, தான் நினைத்ததை கனகட்சிதமாக செய்து முடிக்கிறார் நம்பி. இவர் உருவாக்கிய ராக்கெட் என்ஜினை கண்டு உலக நாடுகள் அனைத்தும் வியப்பில் இருக்க, ஒரு நாள் காலை, இவர் தேச துரோகி என்று பொய் வழக்கு ஒன்று இவர் மேல் பாய, நம்பியின் வாழ்க்கையே முற்றிலுமாக புரட்டிப் போடப்படுகிறது.
அதன்பின், என்ன ஆனார் நம்பி? என்பது தான், தேசம் அறிந்த மீதிக்கதை…
நான்-லீனியர் கதைக் களத்துடன் இப்படத்தின் போக்கு இருக்கிறது. ஆனால், எங்கும் சுவாரசியம் குறையாத வகையறா இந்த ராக்கெட்ரி-தி நம்பி எஃபெக்ட்.
இயக்குனராக மாதவனுக்கு இது தான் முதல் படம் என்று யாராலும் சொல்ல முடியாது. முக்கியமாக வசனங்கள் அனைத்தும் அவ்வளவு பிரமாதமாகவும், யதார்த்தமாகவும் இருக்கிறது. பல வருடங்கள் நடந்த பல நிகழ்வுகளை குறைந்த நேரத்தில் அனைத்தையும் அடக்கி, அதே சமயம் புரியும்படி விரிவாகவும் இயக்கி இருக்கும் ஆர். மாதவனுக்கு ஒரு உற்சாக கைத்தட்டல். கலை வடிவமும், வசனங்களும் விஞ்ஞானிகள் உலகத்தில் பயணித்த அனுபவம் ஏற்படுகிறது.
நடிப்பிற்காக மாதவன் போட்ட உழைப்பு ஒரு காட்சியில் கூட வீண் போகவில்லை. இப்படிப்பட்ட ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்கு மாதவனுக்கு பாராட்டுகளும், நன்றியும்.
எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று உறுதி செய்திருக்கிறார் சிம்ரன்.
உடன் இருந்த அத்தனை கலைஞர்களும் சிறப்பான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்திற்கென தனித்துவமாக இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ். படத்தொகுப்பு சீரான வேகத்துடன் இருப்பதால் அனைத்து தரப்பினரும் காட்சிகளில் தொடர்ந்து செல்லும்படி உள்ளது.
டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என பல மேதைகளை மிக அழகாக காட்டியுள்ளார் ஆர்.மாதவன். நம்பி கதாபாத்திரத்தை போலீஸ் கைது செய்ததும் படத்தின் ஸ்கிரீனை குறைத்தும், அவர் எதிர்பார்க்காத நண்பர் அவருக்கு உதவ வரும் போது மீண்டும் ஸ்க்ரீன் விரிவடைய வைத்தும் நம்பியின் வாழ்க்கையை குறியீட்டு காட்டியிருக்கிறார். இது மாதிரியான பல நுணுக்கங்களை படத்தில் வைத்துள்ளார் மாதவன். படத்தை நன்கு உற்று கவனித்தால் தான் அது புரியும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களை திரையில் காட்டியது, படம் பார்க்கும் அனைவர்க்கும் நெகிழ்ச்சியையும், பரவசத்தையும் தரக்கூடிய காட்சி என்றே சொல்லலாம்.
மேலும், படத்தை பார்க்கும் அனைவர்க்கும் ஒரு விதமான குற்ற உணர்ச்சியை இப்படம் ஏற்படுத்தும். நம்பி நாராயணன் போன்ற மாமேதையை நாம் யாரும் அவருக்கான அங்கீகாரத்தையும், மரியாதையும் கொடுக்கவில்லையே என்ற எண்ணத்தையும் “ராக்கெட்ரி- நம்பி விளைவு” திரைப்படம் நம் மனதில் விதைக்கும்.
இறுதியில், ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்? என்று கேள்வி அனைவரின் மனதிலும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், மக்களின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டால், என்னைப் போல் பாதிக்கப்பட்டவர்கள், இனிமேல் பாதிப்பிற்கு ஆளாக்குபவர்கள் யாருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்காது என்று கூறும் பொழுது சிரம் தாழ்த்தி அவர் தாழ் பணிகிறது பார்ப்பவர்களின் மனது.
ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழும் காலத்திலேயே அவருக்கு இப்படி ஒரு மரியாதை வழங்கி இருக்கும் மாதவனுக்கு சிறப்பு பாராட்டுகள்.
இருப்பினும், பஞ்சாங்கத்தின் துணை கொண்டு தான் செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட்டை அனுப்பினயது உண்மையென்றால், அதை ஏன் மறைக்க வேண்டும். அதில் சிறிது வருத்தமே.
ராக்கெட்ரி- நம்பி விளைவு – ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு மகுடம் சுட்டுகிறது.