*சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆன் லைன் வழியாக பாடம்*
சென்னை சட்டக்கல்லூரி என்பது எப்போதுமே தனிச் சிறப்பும் தனிப் பெருமையும் கொண்ட கல்லூரி ஆகும். 129 ஆண்டு கால சட்டப்பணி என்பது வேறு எந்த கல்லூரிக்கும் கிடைக்காத ஒரு தனிச்சிறப்பு, பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமண்ற நீதிபதிகளை உருவாக்கிய பாரம்பரியமிக்க கல்லூரி தற்போது நாடு முழுவதுமான கொரானா ஊரடங்கை தொடர்ந்து அடுத்த பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளது எனக் கூறலாம். தற்பொழுது சுமார் 1000 இளங்கலை சட்ட மாணவர்களையும், 80 முதுகலை சட்ட மாணவர்களையும் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூரில் இயங்கிவரும் சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி எத்தனை இடர்வரினும் மாணவர்களுக்கு கல்வி தடைபடக்கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் சட்ட கல்வி இயக்குனர். முனைவர்.திரு.சந்தோஷ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி கல்லுரி முதல்வர் முனைவர்.திரு.ச.சொக்கலிங்கம் அவர்களின் உத்தரவுப்படியும் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும், வாட்ஸ்அப், ஸ்கைப், சூம், கூகுல் வகுப்பறை மற்றும் யூடியூப் போண்ற செயலிகளின் மூலம் வகுப்பு எடுப்பது, இணைய வழி தேர்வு நடத்துவது, கல்லூரி செயல்பட்டபோது கொடுக்கப்பட்ட செய்முறை செயல்களை பிடிஎப் வடிவில் பெறுவது போன்ற பல கல்வி சார்ந்த நிகழ்வுகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. இது குறித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி முதல்வர் திரு.ச.சொக்கலிங்கம் கூறியதாவது: உலகம் முழுவதும் அவசர நிலையினை ஏற்படுத்தியுள்ள இந்த கரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாணவர்களின் கல்வி என்பதில் அதிக கவனம் செலுத்துவது ஆசிரியர்களின் கடமை, அதுவும் சட்டம் போன்ற முக்கிய கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தான் நாளைய நாட்டின் நீதிபதிகளாகவும், நீதியை நிலை நாட்டும் வழக்கறிஞர்களாகவும் வரப்போகிறவர்கள், அவர்களின் கல்வி பாதிக்க கூடாது எனவும், குறிப்பிட்ட பருவத் தேர்விற்கு மாணவர்களை தயார்படுத்துமாறும் சட்டகல்வி இயக்குனர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் எங்கள் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடதிட்டத்தை செவ்வனே மாணவர்களுக்கு கற்பித்தும் மாணவர்களின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்தும் அவர்களை தேர்வுக்கு முழுவீச்சில் தயார்படுத்தி வருகின்றனர் என தெரிவித்தார்.