வீதியில் கேரம் போர்டு விளையாடிய அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுகவில் மிக உயர்ந்த பொறுப்பு, மூத்த அமைச்சர், முன்னாள் சபாநாயகர் என பல்வேறு அடையாளங்களுடன் இருப்பவர் திரு.ஜெயக்குமார்.
அரசியல்வாதிகள் என்றாலே வெள்ளை உடையும் கட்சி கொடி தாங்கிய காரும் தான் அடையாளமாய் இருக்கும். அவர்களை மக்கள் அணுகி தங்கள் குறைகளை சொல்வது என்பது சற்று சிரமமான விஷயம். ஆனால், அந்த வகையில் எப்போதுமே தனக்கென ஒரு தனி பாணியில் வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் ஜெயக்குமார்.
செல்லும் வழியில் விலங்குகளை கண்டால் அவற்றுக்கு உணவு கொடுப்பது, சாலையில் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பது, கட்சி நிகழ்ச்சிகளில் கச்சேரிகள் நடந்தால் மேடையில் அவரே பாடுவது, நடனமாடுவது, இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடுவது, ஆழ்கடலில் படகில் பயணித்து கடல் சார்ந்த ஆய்வு பணிகளை மேற்கொள்வது,எப்போதும் எந்த நேரத்திலும் மக்கள் குறை கேட்பது, ஏழ்மையில் இருக்கும் யாரேனும் குறித்து செய்தி தெரிந்தால் அவர்களுக்கு உடனே உதவுவது என்று ஒரு வித்தியாசமான மனிதராகவே வாழ்ந்து வருகிறார்.
நேற்று தனது ராயபுரம் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஜெயக்குமார் சென்றிருந்தார். காரிலிருந்து இறங்கி வீதியில் நடந்து செல்லும் போது சிறுவர்கள் சிலர் கேரம்போர்டு ஆடுவதை பார்த்தார். ஏற்கனவே கேரம் விளையாட்டில் ஆர்வம் கொண்ட அமைச்சர் உடனே சிறுவர்களோடு சென்று அவர்களுக்கு இணையாக அமர்ந்து கொண்டு கேரம் விளையாடத் தொடங்கினார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கேரம் ஆடியதால் அவரால் எளிதாக காயினை போட முடியவில்லை. ஐந்தாவது முயற்சியில் நாணயத்தை கேரம் பாக்கெட்டில் போட்டார். இதைப்பார்த்த சிறுவர்கள் அமைச்சர் தங்களோடு விளையாடியதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து மூன்று நான்கு முறை முயற்சி செய்தும் என்னால் காயினை போடமுடியவில்லை, ஐந்தாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
இதே போல நீங்களும் எந்த விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பின்னர் சிறுவர்கள் அமைச்சரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டனர். புகைப்படத்தை எடுத்துக் கொண்டு சிறுவர்களிடம் கைகுலுக்கி அங்கிருந்து விடைபெற்றார் அவர். எந்த நேரத்திலும் மக்களோடு மக்களாகவே பயணிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்!