மருதம் – திரை விமர்சனம் 4/5

நாயகன் விதார்த் மனைவி ரக்‌ஷனா மற்றும் 4வயது மகனுடன் வாழ்ந்து வருகிறார். தன்னுடைய பூர்விக நிலத்தில் விவசாயம் செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். ஒரு நாள் விதார்த்தின் நிலத்தை தனியார் வங்கியின் மூலமாக ஏலத்தில் எடுத்ததாக வேறொருவர் உரிமை கொண்டாடுகிறார். அதிர்ச்சியில் உறைந்த விதார்த், அந்த வங்கிக்குச் சென்று விசாரிக்கிறார். அதில், இவருடைய தந்தை நிலத்தின் மீது கடன் வாங்கி 6 வருடமாவதாகவும், அதனை இன்னும் கட்டாததால் நிலத்தை ஏலத்தில் விட்டோம் என்று வங்கியில் கூறுகிறார்கள். தந்தை இறந்து ஒரு வருடமாகிறது.
இதனால், மேலும் அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று அறியாமல் திகைத்து போகிறார். பின்பு இதுபற்றி விசாரிக்கத் தொடங்குகிறார். அந்த விசாரணையில் தன்னுடைய நிலத்தின் மீது போலியான ஆதாரங்கள் தயார் செய்யப்பட்டிக்கிறது. இந்த கொடூர செயலை செய்து முன்னாள் வங்கி மேலாளர் தான் என்று கண்டுபிடிக்கிறார் விதார்த்.
தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு நீதி கேட்டு நீதிமன்றம் செல்கிறார். சட்டத்தின் மூலம் தன்னுடைய நிலத்தை மீட்டாரா? தனக்கான நியாயத்தை பெற்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தன்னுடைய ஆர்பாட்டமில்லாத நடிப்பின் மூலம் எவ்வித கதாபாத்திரத்தையும் செம்மையாக செய்யக் கூடியவர் விதார்த். இப்படத்திலும் ஒரு விவசாயியாக மாறி கன்னியப்பாகவே வாழ்ந்திருக்கிறார். ஒரு விவசாயி இப்படத்தைப் பார்த்தால் விதார்த்தை விவசாயியாகத்தான் பார்ப்பார். அப்படிப்பட்ட நடிப்பைக் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
விதார்த்திற்கு இணையாக ரக்ஷனாவும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வசன உச்சரிப்பு மிகவும் அருமை. மேலும் தினந்தோறும் நாகராஜின் நகைச்சுவையை மீண்டும் திரையில் பார்த்ததில் மகிழ்ச்சி.
மேலும், படத்தில் நடித்த அருள்தாஸ், மாறன், சரவண சுப்பையா உள்ளிட்டவர்களும் கச்சிதமாக கதாபாத்திரத்தில் பொருந்தியிருந்தனர்.
இன்னமும் பல கிராமங்களில் தனியார் வங்கிகள் மூலமாக அரங்கேறும் ஒரு கொடூர செயலை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஏழை விவசாயிகளை வங்கி ஊழியர்கள் பார்க்கும் பார்வை, அவர்கள் மீது காட்டும் அலட்சியம் மற்றும் வெறுப்பு, அவர்களை வைத்து சதி வேலை செய்யும் சில ஊழியர்களுக்கு இப்படத்தின் மூலம் இயக்குனர் சாட்டையடி கொடுத்திருக்கிறார், பாராட்டுகள்.
விவசாயிகளுக்கான விழிப்புணர்வு படமாக இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர். தமிழக அரசு இப்படத்திற்கு என்ன மாதிரியான சலுகைகள் கொடுக்க முடியுமோ அதை கொடுத்து, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைவரையும் இப்படத்தை காணச் செய்ய என்ன மாதிரியான வழிவகைகளை செய்ய முடியுமோ அதை செய்து படத்திற்கான ஒரு அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.
என் ஆர் ரகுந்தனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நிலத்திற்கு உயிர் கொடுக்கும் மழை நீர் போல இருந்தது. ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது.

தயாரிப்பு நிறுவனம்: அருவர் பிரைவேட் லிமிடெட்

தயாரிப்பு : சி. வெங்கடேசன்
நடிப்பு : விதார்த் , ரக்ஷனா, அருள்தாஸ், மாறன், தினந்தோறும் நாகராஜ், சரவண சுப்பையா
எழுத்து-இயக்கம் : V கஜேந்திரன்
இசை : என்.ஆர். ரகுநந்தன்
ஒளிப்பதிவு :அருள் K சோமசுந்தரம்
எடிட்டிங் : B சந்துரு
மருதம் – விவசாயிகளின் உரிமை போராட்டம்