தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை பரப்ப, ஒரு சிண்டிகேட் கும்பல் வேலை செய்து வருகிறது. அவர்களுக்காக 6 கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை ஏற்றிக் கொண்டு தனது அடியாட்களுடன் சென்னைக்கு வருகிறார்கள் வில்லன்களான வித்யூத் மற்றும் ஷபீர்.
இவர்கள் துப்பாக்கி ஏற்றி வரும் செய்தி NIA (National Investigation Agency ) க்கு தெரிந்து விடுகிறது. இதனைத் தடுக்க, தனது ஃபோர்ஸுடன் அங்கு களமிறங்குகிறார் NIA அதிகாரி பிஜூ மேனன். தாக்குதலின் முடிவில் வித்யூத் மற்றும் ஷபீர் துப்பாக்கிகளுடன் சென்னைக்குள் சென்று விடுகிறார்கள்.
அதன்பிறகு, காதலி ருக்மணி விட்டுச் சென்ற சோகத்தில், தான் சாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை சந்திக்கிறார் பிஜூ மேனன். துப்பாக்கிகளை வைத்திருக்கும் இடத்திற்குள் அதாவது வித்யூத் மற்றும் ஷபீர் இருக்கும் இடத்திற்குள் சிவகார்த்திகேயனை அனுப்ப நினைக்கிறார் பிஜூ மேனன். உள்ளே சென்றால் செத்துவிடுவோம் என்ற எண்ணத்தில் அங்கு செல்கிறார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் சிவகார்த்திகேயன், ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருக்கிறார். இதற்கு முன் நடித்த படங்களை விட, இப்படத்தில் ஆக்ஷனில் அதிரடி காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதுவரை பார்க்காத ஒரு சிவகார்த்திகேயன் இப்படத்தில் நிச்சயம் பார்க்கலாம். படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையிலும் அதே எனர்ஜியோடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிலும், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் சீட்டின் நுனிக்கே நம்மை அழைத்து வந்துவிட்டார் சிவகார்த்திகேயன். காட்சிகளுக்கு அழகாக வந்து செல்கிறார் நாயகி ருக்மணி.
படத்திற்கு மிகப்பெரும் பலமே இரண்டு வில்லன்கள் தான். வித்யூத் மற்றும் ஷபீர் இருவருமே ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறார்கள். அதிலும் வித்யூத் விளையாடிய எண்ட்ரீ காட்சி, டார்க் பில்டிங் சண்டைக் காட்சி, க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி மூன்றிலும் தனது அசாத்திய சண்டைத் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். இருவருக்குமே போடப்பட்ட பிஜிஎம் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.
பிஜூ மேனன் சட்டில்டான நடிப்பைக் கொடுத்திருந்தார்.
அதிரடியாக சென்று கொண்டிருக்கும் திரைக்கதையில் ஆங்காங்கே ஸ்பீட் ப்ரேக்கர் மாதிரியாக காதல் காட்சியை நடுவில் கொண்டு வந்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் இதுவரை நடித்திராத ஒரு ஃபுல் ஆக்ஷன் பேக் படத்தை ரசிகர்களுக்காக கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன லாஜிக் மிஸ் ஆனாலும் அதிரடியாக செல்லும் திரைக்கதை அனைத்தையும் மறக்கடிக்க வைத்துவிடுகிறது.
ஆக்ஷன் படத்தினை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சரியான தீனியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஒளிப்பதிவு மிகப்பெரும் ப்ளஸ் என்றே கூறலாம். அதிலும், குறிப்பாக சண்டைக் காட்சிகளில் தனது ஒளிப்பதிவின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
அனிருத்தின் இசையில் சலம்பல பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. மற்ற பாடல்கள் ஏனோ மனதில் பெரிதாக நிற்கவில்லை. பின்னணி இசையில் வழக்கம் போல் மாஸ் காட்டியிருக்கிறார் அனிருத்.
இரண்டாம் பாதியின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுத்திவிட்டது. ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் சூப்பராக வடிவமைக்கப்பட்டு காட்சியினை படமாக்கியிருக்கிறார்கள்.
முழுமையான ஆக்ஷன் படம் என்று சந்தேகத்திற்கு இடமின்றி கூறலாம்.
மதராஸி – அதிரடி காதலன்