ஆரம்பக் காட்சிகளிலேயே இருக்கையின் நுனியில் உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர். அசிஸ்டன்ட் கமிஷனரின் பெண்ணான சேஷ்விதாவை கடத்தி கொடூரமாக கொன்று விடுகிறார் தருண் விஜய். அவரை போலீஸில் சரண்டர் ஆகி இந்த விஷயத்தை கூறுகிறார். போலீஸ் விசாரணையில் அவர் இதற்கு முன்பு இன்னும் இரண்டு கொலைகள் செய்ததாக கூறுகிறார். அவர் ஏன் இந்த மூன்று கொலைகளையும் செய்தார் என்பதை போலீஸ் தனிப்பட வைத்து விசாரிக்கிறது.
நீதிமன்றத்தில் தருண் விஜய் நடந்து கொண்ட விதத்தை பார்க்கும் நீதிபதி அவர் சராசரியான மனிதன் இல்லை என்றும் அடுத்த கட்ட விசாரணையில் அதற்கான மருத்துவ அறிக்கையும் சமர்ப்பிக்கும் படி உத்தரவிடுகிறார். இந்நிலையில் தரும் விஜய் தங்கி இருந்த அறைக்கு பக்கத்தில் தங்கியிருந்த ஆட்டோ டிரைவரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது.
தருண் விஜய் ஏன் கொலைகளை செய்கிறார்? அதற்கான காரணம் என்ன? அவர் சைக்கோ கொலைகாரனா? சேஷ்விதா என்ன தப்பு செய்திருக்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை.
தருண் விஜய் தன் கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட மிகவும் சிரத்தை எடுத்திருக்கிறார். அதிலும் மிருகம் போல நடந்து வரும் காட்சியில் அதிர வைக்கிறார். அறிமுக காட்சியில் இருந்து இறுதி காட்சிவரை அச்சு பிசிறாமல் நடித்திருக்கிறார், பாராட்டுகள்.
சேஷ்விதா கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை அளவாக செய்திருக்கிறார். திறமையை வெளிப்படுத்த கூடிய கதாபாத்திரம் கொடுத்தால் சிறந்த நடிகையாக வருவார்.
மதுசூதனராவ் மகள் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டாள் என்ற செய்தி கேட்டதும் டாக் அசிஸ்டன்ட் கமிஷனர் என்பதையே மறந்து அப்பாவாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் வெளிநாடு சென்று திரும்பும் தன் மனைவியை பார்த்தவுடன் அவருடைய துக்கத்தை வெளிப்படுத்தும் காட்சியில் அனைவரையும் கலங்க வைக்கிறார்.
நிழல்கள் ரவி, பிரியதர்ஷினி ராஜ்குமார் முதல் இப்படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.
சஸ்பென்ஸ் திரில்லர் என காட்சிகளை ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங். கொலை செய்யும் காட்சிகளை இவ்வளவு வன்முறையாக கொடூரமாக காட்ட வேண்டுமா என்ற கேள்வி படம் பார்க்கும் அனைவரின் மனதிலும் மனதுக்குள் கேள்வி வரும். காதல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கொடுத்திருக்கலாம். எனினும் இப்படத்தை சிறந்த முறையில் இயக்கி இருக்கிறார் மற்றும் அனைவரிடத்திலும் நோவா ஆம்ஸ்ட்ராங் நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் என்பது தெரிகிறது.
காட்சிகேற்ப இசை அமைத்து த்ரில்லிங்கை ஊடுருவ செய்து இருக்கிறார் கரண் பீ கிருபா. ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் என்பது தெரிகிறது. அதேபோல் எஸ் கமலக்கண்ணனின் படத்தொகுப்பும் அடுத்தடுத்த காட்சிகளை தொய்வில்லாமல் நகர செய்திருக்கிறது.
தருண் விஜய் இப்படத்தை தயாரித்து தானே நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
குற்றம் புதிது – பெயருக்கு ஏற்ப புதிது தான்