முன்பு ஒரு காலத்தில் ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார் என்று விஜய் சேதுபதி பின்னணி குரலில் படம் ஆரம்பிக்கிறது. தன் அப்பாவிற்கு கௌசல்யாவுடன் தொடர்பு இருப்பது கவினுக்கு தெரிய வருகிறது. கவினின் பெற்றோரான தேவயானியும், ராவ் ரமஷும் பிரிகிறார்கள். காதலை வெறுப்பவராக கவின் இருக்கிறார். அவருடைய நண்பரான விஜே விஜய் கவினுக்கு என்ன அட்வைஸ் செய்தாலும் கேட்க மறுக்கிறார். காதலால் கண் கலங்கி தெருவில் நிற்பாய் என்று ஒரு பெண்ணின் சாபம் பெறுகிறார் கவின். அதைப் பொருட்படுத்தாத கவினுக்கு ப்ரீத்தியைக் கண்டதும் காதல் வருகிறது. ப்ரீத்தி கொடுத்த புத்தகத்தை வாங்கி கொள்ளும் கவின், அதன் மூலம் தனக்கு யாராவது உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தால் அவர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது மனக்கண் முன் தெரிவதாகவும், ஒரு அமானுஷ்ய சக்தி கிடைக்கிறது என்றும் உணர்கிறார். அதை விஜே விஜயிடம் கூறுகிறார்.
இந்நிலையில், ப்ரீத்திக்கும் கவின் மீது காதல் வர கவினுக்கு முத்தம் கொடுக்கிறார். உடனே, அடுத்து நடக்கப் போகும் விபரீதத்தை கவின் உணர்ந்து ப்ரீத்தியை பிரிகிறார்.
மன்னர் கதைக்கும் கவினுக்கும் என்ன சம்பந்தம்? அந்த புத்தகத்தில் அப்படி என்ன இருக்கிறது? இறுதியில் கவினின் பெற்றோர் இணைந்தார்களா? கவினின் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கவின் எப்போதும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடிக்கக் கூடியவர். ஆனால், இந்த படத்தில் சில இடங்களில் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அப்படியே நிற்கிறார். ப்ரீத்தி அயோத்தி படத்தில் நடித்தவரா? என்று புருவம் உயர்த்தும் அளவிற்கு நடிப்பிலும் அழகிலும் ஜொலிக்கிறார்.
வி ஜே விஜய் தன் அப்பா விடிவி கணேஷுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் சுவையாக இருக்கிறது. தேவயானி, பிரபு, கௌசல்யா, ராவ் ரமேஷ் மற்றும் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.
நடன இயக்குனர் சதீஷ் முதல் இயக்கமான இப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லையோ என்று தோன்றுகிறது. நடன காட்சிகள் இன்னும் கொஞ்சம் வைத்திருக்கலாம். அல்லது ஒரு பாடலாக அமைத்து அதில் நடன திறமையையும் வெளிப்படுத்தியிருக்கலாம். இருப்பினும், இளைய தலைமுறையினரை கவரும் வகையில் படம் இருக்கிறது.
ஜென் மார்ட்டினின் இசையும், ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ராகுல் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.
கிஸ் – இளசுகளுக்கு இனிப்பு