தமிழகத்தின் மன்னராட்சி காலத்தில் முடி சூடிய ராஜாக்களில் ஒருவரும் நெல்லை மாவட்டம் சிங்கப்பட்டி ஜமீனின் 31 வது ராஜாவுமான அய்யா முருகதாஸ் தீர்த்தபதி அவர்கள் சற்று முன்னர் காலமானார்.
இவருக்கு வயது 89.
1200 வருட பழமைவாய்ந்த சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் முடி சூடிய ராஜாவாக திகழ்ந்தவர்…
தமிழ்நாட்டின் கடைசி ராஜா நமது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தென் இந்தியாவில் எஞ்சியிருக்கும் பட்டம் கட்டிய ஒரே ராஜாவாகக் கருதப்படுபவர்தான் நமது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி. இவரது முழுப்பெயர் தென்னாட்டு புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதி சங்கர ஜெய தியாக முத்து சண்முக சுந்தர முருகதாஸ் தீர்த்தபதி.
சுருக்கமாக டி. என். எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவரது தந்தை சங்கர தீர்த்தபதி. ஆங்கிலத்தில் மிகச்சிறந்த புலமை பெற்றுள்ள இவர் சிறந்த டென்னிஸ் விளையாட்டு வீரர். பாலே நடனத்தில் புகழ் பெற்றவர்.
ரக்பி விளையாட்டிலும் முத்திரை பதித்ததால், தந்தை இறந்ததை அடுத்து மூன்றரை வயதில் இவருக்கு முடிசூட்டப்பட்டுள்ளது. அக்கால சம்பிரதாயப்படி முடி சூட்டப்படுபவர் பிரேதத்தைப் பார்க்கக் கூடாதாம். அதனால் தந்தையாரின் பிரேதத்தைக் கூட இவருக்கு காட்டவில்லையாம்.
முடி சூட்டப்படுபவர்களுக்கு ஆய கலைகள் அறுபத்து நான்கும் கற்பிக்கப்படுவதுண்டு. ஆனால், இவருக்கு அப்படி எந்த பயிற்சியும் அளிக்கப்படவில்லையாம். இருந்தாலும் இவரோ குறி பார்த்து சுடுதல், ரக்பி, பாலே நடனம், உதைப்பந்தாட்டம். சிலம்பு, வாள் வீச்சு என்று பல துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் அமைந்துள்ளது சிங்கம்பட்டி பகுதி.
கிபி 1100ல் சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிங்கம்பட்டி ஜமீன் காரர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுவட்டார பகுதிகளிலும் சண்டைக் கலையிலும் சிறந்து விளங்கினார்கள். சிங்கம்பட்டியின் முதல் ஜமீனாக தன்னை அறிவித்துக்கொண்டவர் பிரீதிபாலு என்பவர். இவர் பாண்டியர்களுடன் நெருக்கம் காட்டினார்.
1952ல் ஜமீன் ஒழிப்பு சட்டம் வந்தது. இதற்கு முன் 74 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் இருந்தது. இவை தற்போது சுற்றுலாத் தளங்களாக போற்றப்படுகிறது. சிங்கம்பட்டி அரண்மனை என்பது ஜமீன்தாரின் அரண்மனை. இந்த அரண்மனை ஐந்து ஏக்கரில் உள்ளது. இதில் அவரின் குடும்பத்தினர் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். ஜமீன் வாரிசுகள், அதன் பாரம்பரியமான சில பொருள்களை இப்போதும் பாதுகாத்து வருகின்றனர். அரண்மனையின் ஒரு பகுதியில் கலைப் பொருள்கள் காப்பகம் உள்ளது.