சிவன் அமைதியாக தவம் செய்வதற்காக பார்வதி அழகான பகுதியைத் தயார் செய்து கொடுக்கிறார். அதன் பெயர் தான் காந்தாரா. அது ஒரு அடர்ந்த வனப்பகுதி. காட்டுப்பகுதி மக்கள் அங்கு வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு இயற்கையை கடவுளாக வணங்கி வருகின்றனர்.
அந்த வனப்பகுதியில் ஒரு பள்ளத்தில் குழந்தை இருக்கிறது. அதை எடுத்து வளர்க்கிறார் ஒரு காட்டுவாசிப் பெண். அவரால் பெர்மே என்று பெயர் சூட்டப்படுகிறார் ரிஷப் ஷெட்டி. இங்கிருப்பவர்கள் வீரத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
காந்தாரா அருகே பாங்காரா என்ற பகுதியை ஆண்டு வருகிறார் மன்னர் ஜெயராமன். இவரின் மகனாக குல்ஷன் தேவய்யாவும் மகளாக ருக்மிணியும் நடித்திருக்கிறார்கள்.
தன்னுடைய அப்பா தனக்கு மகுடம் சூட்டி பார்க்க முடியாமல் இறந்து விடுவதால், தன் மகன் குல்ஷனுக்கு மகுடம் சூட்டி ஆசையை நிறைவேற்றுகிறார். எப்போதும் மதுவும் மாதுவாகவும், ஆட்சியை சரியாக கவனிக்காமல் பொறுப்பில்லாத மன்னராக இருக்கிறார் குல்ஷன்.
ஈசனின் பூந்தோட்டம் என்று சொல்லப்படும் காந்தாராவை கைப்பற்ற நினைக்கிறார் குல்ஷன். அங்கு சென்றால் மரணம் தான் வரும் என்று எச்சரிக்கிறார் ஜெயராமன். அதையும் மீறி அங்கு சென்ற குல்ஷன், காந்தாரா மக்களிடம் தோல்வியடைந்து திரும்புகிறார்.
ஆனால், காந்தராவில் அனைத்து வசதிகளையும் கொண்டு வர வேண்டுமானால் வியாபாரம் செய்து பொருள் ஈட்ட வேண்டும் என்று ரிஷப் அம்மக்களை வழிநடத்துகிறார். அவரது ஆலோசனையின்படி பாங்காரா பகுதிக்குள் நுழைந்து, அங்கு வியாபாரம் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஒரு கட்டத்தில், இந்த விஷயம் மன்னர் குல்ஷனுக்குத் தெரியவர, காந்தாராவை அழிக்க பெரும் படையோடு அங்கு செல்கிறார்.
இந்நிலையில், இன்னொருபுறம் காந்தாராவை தங்கள் வசமாக்க சித்துவேலை செய்கிறது ஒரு கூட்டம்.
அந்த கூட்டத்தினர் யார்? காந்தாரா பகுதிக்கு என்ன நடந்தது? இதற்குள் இருந்த துரோகம் என்ன சதி என்ன? என்பதே படத்தின் மீதிக் கதை.
ரிஷப் ஷெட்டி, இதற்கு முன் வந்த பாகத்தை விட, இப்படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார். அப்படி ஒரு எனர்ஜியை ஒவ்வொரு காட்சியிலும் கொடுத்துக் கொண்டே இருந்தார். எந்த இடத்திலும் சோர்வடையாமல், காட்சிகளின் வேகத்தை தன் நடிப்பால் இழுத்துக் கொண்டே சென்றிருக்கிறார். படத்தின் மொத்த கதையையும் ஒத்த ஆளாக தனது தோளில் சுமக்கிறார் ரிஷப் ஷெட்டி.
பாங்காராவின் இளவரசியாக அழகு பதுமையாக வீராங்கனையாக வலம் வருகிறார். படத்தின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒவ்வொரு காட்சியும் இவரால் பிரகாசமாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.
ஒரு கதாபாத்திரத்தை பார்த்தாலே எரிச்சல் வருகிறது என்றால் அது குல்ஷன் தேவய்யாவின் கதாபாத்திரம் தான். தனக்கான பாத்திரத்தை பிசிரில்லாமல் செய்திருக்கிறார்.
ஜெயராம் தனது அனுபவ நடிப்பை அளவாக கொடுத்து ரசிக்க வைக்கிறார்.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கடுமையான உழைப்புத் தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் அதற்கேற்றபடி கலர்ஃபுல்லாக இருக்கிறது.
இப்படம் அருமையான திரையரங்கில் கண்டுகளிக்கும்படியாக படமாக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசை மற்றும் பாடல் என காட்சிக்கு காட்சி பிரமாண்டத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருக்கின்றனர்.
வி எஃப் எக்ஸ் பணிகளை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். அதிலும், புலி வரும் காட்சியை மிகவும் தத்ரூபமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள்.
இந்திய சினிமாவில் இப்படம் முன்னணி பட்டியலில் இடம் பெறும். இப்படத்திற்கென்று நிச்சயம் தேசிய விருதினை ரிஷப் ஷெட்டி பெறுவார் என்பதில் ஐயமுமில்லை, ஆச்சரியமுமில்லை.
அதிலும் கடைசி அரை மணி நேரம் இருக்கையின் நுனிக்கே ரசிகர்களை அழைத்து வந்து பிரமாண்டத்தினை காட்டியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.
எழுத்து & இயக்கம் : ரிஷப் ஷெட்டி
நடிகர்கள்: ரிஷப் ஷெட்டி, ஜெயராம், ருக்மணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம்
தயாரிப்பு: ஹேம்பாலே பிலிம்ஸ் விஜய் கிரகன்தர்
இசை: அஜ்னீஸ் லோக்நாத்
ஒளிப்பதிவு: அரவிந்த் எஸ் காஷ்யப்
காந்தாரா சேப்டர் 1 – பிரமாண்டத்தின் உச்சம்