காயல் – திரைவிமர்சனம் 3.5/5

ஐசக் மற்றும் அனு மோல் இருவருக்கும் மகளான காயத்ரி சங்கர் படத்தின் தொடக்கத்திலேயே புகுந்த வீட்டில் தற்கொலை செய்து இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இதை கேட்டு பதறி துடித்துக் கொண்டு செல்லும் ஐசக் மற்றும் அனு மோல் மகளை பார்த்து கதறி அழுகிறார்கள்.

இந்தக் காட்சியில் இருந்து படம் பிளாஷ்பேக்கை நோக்கி செல்கிறது. தனது பெற்றோர் மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கிறார் காயத்ரி சங்கர். இவர் லிங்கேஷை காதலிக்கிறார். தன் மகள் மீது வைத்திருக்கும் பாசத்தால் காயத்ரியின் காதலுக்கு எந்த வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சம்மதம் சொல்கிறார் ஐசக் வர்கீஸ். ஆனால், ஜாதியை காரணம் காட்டி அனுமன் இவர்களின் காதலை மறுத்து விடுகிறார். இதோடு இல்லாமல் தன் அண்ணன் மகனுக்கு காயத்ரியை கட்டாய கல்யாணம் செய்து வைக்கிறார்.

காயத்ரியின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா.? காயத்ரியின் மறைவிற்கு பின்னர் ஐசக் மற்றும் அனுமோல் இருவரின் நிலை என்ன? என்பதை படத்தின் மீதி கதை.

கதையில் அனைத்து கதாபாத்திரங்களும் மிக அழகாகவே பொருந்தியிருக்கின்றனர். ஒரு கவிதையாக படத்தின் காட்சிகள் நகர்வது படத்திற்கு மிகப்பெரும் பலம்.

பல படங்களில் வில்லனாக பார்த்த ஐசக் அவர்களை, இப்படத்தில் ஒரு நல்ல மனிதராக பார்க்கும் போது அழகாக தெரிகிறார்.

அனுமோலின் நடிப்பை சொல்லித் தெரியவேண்டியதில்லை. திரையில் வந்து நின்றாலே, அக்கதாபாத்திரமாகவே மாரி நடிப்பை பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அசத்தியிருக்கிறார்.

ரமேஷ் திலக் அளவாக நடித்த பெயர் வாங்கி இருக்கிறார். ஸ்வகதா கிருஷ்ணாவின் கண்கள் பேசுகிறது.

மிகைப்படுத்தும் காட்சிகள் எதுவுமின்றி, கணவன் & மனைவிக்கிடையே இருக்கும் காதல், தந்தை & மகளுக்கு இடையே இருக்கும் பாசம், தாய் & மகளுக்கு இடையே இருக்கும் அன்பு என அனைத்தையும் ஒரு சில காட்சிகளில் மிக அழுத்தமாக பதிவு செய்துவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர்.

ஒரு மார்டன் கலாச்சாரம் உள்ள குடும்பத்தில் சாதியானது ஒரு இழப்பை எப்படி ஏற்படுத்தும் என்பதை மிக அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர் தமயந்தி.

க்ளைமாக்ஸ் காட்சியானது படம் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியிருக்கிறது. அதிலும், ஜஸ்டீனின் இசையில் பாடல்கள் நம்மை கலங்கடித்துவிடுகிறது. பாடல்கள் ஒவ்வொன்றும் காதுகளுக்கு இனிமையாக வந்துருக்கிறது. பின்னணி இசையும் கதையோடு சேர்ந்து நம்மை நகர வைக்கிறது. கண்களுக்கு விருந்தாக பிச்சாவரம் பகுதியை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்பிரமணியம். பர்வீன் பாஸ்கர் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜேசு சுந்தரமாறன் தயாரித்திருக்கிறார்.

ஒரு சாதியப் பார்வை ஒரு குடும்பத்தை எப்படி நிலைகுலைய வைத்திருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக காட்டியிருக்கும் கவிதை படைப்பு தான் இந்த காயல்

காயல் – கனம்