ராஜீவ் காந்தி கொலையில் படம் ஆரம்பிக்கிறது. ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள் சிலரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அதில் சசிகுமாரும் ஒருவர். நிறைமாத கர்ப்பிணியான தன் மனைவி லிஜோ மோல் ஜோஸை விட்டுவிட்டு சிறையில் தவிக்கிறார் சசிகுமார். ராஜீவ்காந்தி கொலைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று நிரூபிக்க போராடுகிறார். இன்னொரு பக்கம் பெண் குழந்தையை பெற்றேடுத்த லிஜோ மோல் தன் கணவரை சந்திக்கவும், சிறையில் இருந்து மீட்கவும் மாவட்ட ஆட்சியரிடம் போராடுகிறார்.
இந்நிலையில், சில விசாரணை கைதிகள் தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். முதலில் அவர்களை தடுத்த சசிகுமார், பிறகு இவரே தப்பிக்க திட்டம் போடுகிறார். அதற்குள் சிறை அதிகாரி சசிகுமாரை கொல்ல ஆள் அனுப்புகிறார்.
சசிகுமார் அவரது ஆட்களுடன் தப்பித்தாரா? அல்லது சிறை அதிகாரி அனுப்பிய ஆட்களால் கொல்லப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக் கதை.
இலங்கை அகதிகளின் நிலைமையை யதார்த்தமாக இயக்கி பாராட்டை பெறுகிறார் இயக்குனர். அதுமட்டுமில்லாமல், சிறையில் நடக்கும் சம்பவங்கள், சிறை அதிகாரிகளால் விசாரணை கைதிகளுக்கு நடக்கும் கொடுமைகளையும், அநியாயங்களையும் தோலுரித்து காட்டியிருக்கிறார்.
குறிப்பாக, பிரசவத்தின் போது மிளகாய் நெடி பெண்களுக்கு சுலபமாக குழந்தை பெற மருந்தாக இருக்கும் என்ற அன்றைய கால வழக்கத்தை காட்சிப்படுத்தியிருப்பது அருமை.
இரண்டாவது பாதியில் இருக்கை நுனியில் வைத்த இயக்குனருக்கு சபாஷ்.
இயக்குனருக்கு முதுகெலும்பாக படத்தொகுப்பாளர் பணியாற்றியிருக்கிறார். பின்னணி இசை படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.
சசிகுமார் வழக்கம் 100% ஸ்கோர் செய்திருக்கிறார். லிஜோமோல் கணவர் மீது கொண்ட ஆழமான பாசத்தை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். சிறை அதிகாரியாக வருபவர், அனைவரின் கோபத்திற்கும் ஆளாகும் வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
ஃபிரீடம் – சுதந்திரத்தை தேடி
நடிகர்கள்
M. சசிகுமார்
லிஜோமோல் ஜோஸ்
சுதேவ் நாயர்
மாளவிகா அவினாஷ்
போஸ் வெங்கட்
மு ராமசாமி
சரவணன்
ரமேஷ் கன்னா
இயக்கம் – சத்யசிவா
எழுத்து – சத்யசிவா
தயாரிப்பு – பாண்டியன் பரசுராமன்
ஒளிப்பதிவு – N. S. உதயகுமார்
படத் தொகுப்பு – N. B. ஸ்ரீகாந்த்
இசை – ஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு கம்பெனி – விஜயா கணபதி பிக்சர்ஸ்