திரௌபதி 2 – திரை விமர்சனம் 3/5

“திரெளபதி 2” என்பது நிகழ்கால சம்பவத்தையும், பழங்கால வரலாற்று பின்னணியையும் இணைத்து சொல்லும் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது.

வக்பு வாரியம் நிலம் தொடர்பான பிரச்சனை ஒன்று எழும்ப, அதை விசாரிக்க ஊர் மக்களில் ஒருவராக ரிச்சர்ட் ரிஷி வருகிறார். அதே நேரத்தில், பல வருடங்களாக பாழடைந்து கிடக்கும் ஒரு கோயிலை புதுப்பிக்க வெளிநாட்டில் இருந்து நாயகி ரக்ஷனா இந்துசூடன் வருகிறார்.

கோயிலுக்குள் சென்றவுடன், அவர் தூய தமிழில் பேசித் தான் திரெளபதி என கூறி, தனது கடந்தகால கதையை ப்ளாஷ்பேக் வடிவில் சொல்ல ஆரம்பிக்கிறார். இதன் மூலம் கதை பதினான்காம் நூற்றாண்டுக்கு நகர்கிறது.

திருவண்ணாமலை பகுதியை ஆண்ட வீர வல்லாளர் (நட்டி) மற்றும் அவரின் வீரமிக்க தளபதி வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட் ரிஷி) கதைக்களத்தின் மையமாக இருக்கிறார்கள். துக்ளக் ஆட்சியின் அடக்குமுறைகளுக்கு எதிராக வீர வல்லாளர் நின்ற காலகட்டமே படத்தின் முக்கிய வரலாற்று பின்னணி.

ரிச்சர்ட் ரிஷி தனது கதாபாத்திரத்தில் முழுமையாக பொருந்தி நடித்துள்ளார். முந்தைய படங்களை விட அவரது நடிப்பு இதில் அதிகமாக மேம்பட்டுள்ளது. வீர வல்லாளராக நடித்த நட்டி, நடை, உடை, பேச்சு என அனைத்திலும் பாத்திரத்திற்கு முழு அர்ப்பணிப்பையும் கொடுத்திருக்கிறார்.

திரெளபதியாக வந்த ரக்ஷனா இந்துசூடன் தமிழ் உச்சரிப்பு, வசன delivery மற்றும் கண்களாலேயே உணர்ச்சியை வெளிப்படுத்தும் நடிப்பு மூலம் படத்தின் முக்கிய பலமாக திகழ்கிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளுக்கு தேவையான தாக்கத்தை வழங்குகிறது. பிலிப் கே. சுந்தரின் ஒளிப்பதிவு சூழலை அழகாக காட்டினாலும், இன்னும் பிரம்மாண்டமான visual treatment கிடைத்திருக்கலாம் என்ற உணர்வு உள்ளது.

மொத்தத்தில், “திரெளபதி 2” கடின உழைப்பும் தீவிரமான நடிப்பும் கொண்ட ஒரு வரலாற்று முயற்சியாக இருக்கிறது.

Cast & Crew

இயக்கம்: மோகன் ஜீ

தயாரிப்பு: நேதாஜி புரொடக்ஷன்ஸ் (சோலா சக்கரவர்த்தி)

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு: பிலிப் கே. சுந்தர்

கலை இயக்கம்: எஸ். கமல்

சண்டைப் பயிற்சி: ஆக்‌ஷன் சந்தோஷ்

படத்தொகுப்பு: எடிட்டர் தேவராஜ்

நடிகர்கள்:

ரிச்சர்ட் ரிஷி

ரக்ஷனா இந்துசூடன்

  1. நட்டி நட்ராஜ்