காளகம்மாய்பட்டி என்ற கிராமத்தில், சாதி வேற்றுமை எதுவும் பார்க்காமல் ஒற்றுமையாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மலையின் உச்சியில் ஜோதி தெரிந்து, மயிலும் தெரிய கடவுளின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டதாக எண்ணி ஊரே திருவிழா கொண்டாடும். இது வருடவருடங்களாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஊரில் பெரும் வெள்ளம் வருகிறது. அப்போது, அருகிலிருக்கும் மலையிலிருந்து இரு கற்கள் விழுகின்றன. அந்த வருடம் ஜோதியும் இல்லாமல், மயிலும் காட்சியளிக்காமல் செல்ல, இரு ஜாதி பிரிவினரிடையேயும் சண்டை வருகிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டு கற்களையும் ஆளுக்கொன்றாக எடுத்துக் கொண்டு அதனை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். காளகம்மாய்பட்டியானது காளப்பட்டியாகவும் கம்மாய்பட்டியாகவும் பிரிகிறது.
சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட இரு சாதி பிரிவினரிடையே தொடர்ச்சியாக மோதல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனை பல வருடங்களாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அரசு அதிகாரிகள் தலையீட்டும் இந்த இரு சாதி பிரிவினரிடையே இருக்கும் மோதலை தடுக்க முடியவில்லை. இதனால், கிராமத்திற்கு கிடைக்கும் எந்த வித திட்டங்களும் கிடைக்காமல் போய்விடுகிறது.
இதே கிராமத்தில் வாழும் காளி வெங்கட், இரு பிரிவினரையும் சேர்க்க பல வழிகளில் முயற்சி செய்கிறார் எதுவும் பலனளிக்கவில்லை. இவரது தங்கை ஷிவாத்மிகா. இவரது நண்பர் அர்ஜூன் தாஸ். இந்த கிராமத்தை விட்டு, தனது நண்பன் காளி வெங்கட்டோடு வெளியூர் சென்று தனது வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர் அர்ஜூன் தாஸ். என்ன நடந்தாலும், தனது கிராமத்தை விட்டு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பவர் காளி வெங்கட். அர்ஜூன் தாஸ் மீது ஷிவாத்மிகாவிற்கு காதல்.
ஒருநாள், காளி வெங்கட் இறந்து விட, அதிர்ச்சியில் உறைகிறது கிராமம். இறந்து போனாலும், அவர் உடலிலிருந்து குசுவானது அவ்வப்போது வந்து கொண்டிருக்க, தனது நண்பன் இறக்கவில்லை என்று நம்புகிறார் அர்ஜூன் தாஸ்.
இரண்டு ஊருக்கும் நடுவே இருக்கும் ஆலமரத்தடியில் காளி வெங்கட்டை தூக்கிச் சென்று வைக்கிறார் அர்ஜூன் தாஸ். அவர் குசு விட்டு, உடல் ஆட்டம் ஆடுவதால், ஊர் பூசாரி நம்ம ஊருக்கு சாமி வந்திருக்கிறது என்று கூறுகிறது. இதனால், இரண்டு கிராமமும் இணைந்து காளி வெங்கட்டை சாமியாக பாவிக்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
கதையின் நாயகனான அர்ஜூன் தாஸ், இப்படியான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக முதலில் பாராட்டினைத் தெரிவித்துக் கொள்ளலாம். படத்தில் தனக்கான முக்கியத்துவம் என்பது பெரிதாக இல்லை என்று தெரிந்தும், கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டு இப்படத்தில் நடித்திருக்கிறார்.
காட்சிகளில் எவ்விதமான ஹீரோயிசமும் இல்லாமல், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.
நாயகி ஷிவாத்மிகா, தனக்குக் கொடுக்கப்பட்டதை உணர்ந்து காட்சிகளில் அழகு தேவதையாக ஜொலிக்கிறார். படத்தில் சில நிமிடங்களே தனக்கான நடிப்பை வெளிப்படுத்தும் தருணம் இருந்த போதிலும், அதை சூப்பராக செய்து முடித்து, அதன் பிறகு பிணமாக பொறுமையான நடிப்பினைக் கொடுத்ததற்காக படக்குழுவினரை பாராட்டலாம்.
படத்தில் நடித்த மற்ற நடிகர்களான, சிங்கம்புலி, கிச்சா ரவி, அபிராமி, பால சரவணன், நாசர், ராட்சசன் சரவணன் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
கதையின் ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது ராட்சசன் சரவணன் நடிப்பு.
ஜாதியால் பிளவுண்டு கிடக்கும் ஊரினை ஒரு போராளியின் மரணம் என்று கூறுவதை விட, அவரின் குசு எப்படி இந்த கிராமத்தை ஒன்று சேர்த்தது என்பதே படத்தின் மூலக் கதையாக பார்க்கப்படுகிறது.
மிக அழகான கதையை மிக அழகாக இயக்கியிருக்கிறார் இயக்குனர். காட்சிகள் ஒவ்வொன்றும் படமாக்கிய விதம் படத்திற்கு கூடுதல் பலமே. திரைக்கதையை இன்னும் சற்று பரபரப்பாக கொடுத்திருக்கலாம் என்று ஒரு சில இடங்களில் எண்ண வைத்துவிட்டார் இயக்குனர்.
வசனங்கள் படத்திற்கு பெரிய பலம். அபிராமி பேசும் வசனமானது திரையரங்குகளில் கைதட்டல், விசில் பறக்க வைக்கிறது.
மூட நம்பிக்கைகளையும் மதத்தினையும் வைத்து பிழைப்பு நடத்தும் ஒரு சிலருக்கு இப்படம் ஒரு பாடம் தான்.
பாம்ப் – சத்தம் குறைவு