பொதுவாகவே, விளம்பரத்திற்காக காலம் காலமாக வியாபாரிகள், சினிமா வட்டாரங்கள், அரசியல்வாதிகள் என பலரும் பின்பற்றி வருவது தான் போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம்.
ஆனால், போஸ்டர்கள் ஒட்டுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. அத்துமீறி நோட்டிஸ் அல்லது போஸ்டர் ஒட்டப்பட்டால் அதற்கான சட்ட சிக்கல்களும் சில உள்ளன.
அந்த சட்டத்திற்கெல்லாம் கட்டுப்படாத வண்ணம் உள்ளது சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ.கவினர் செய்திருக்கும் வேலை. இன்று காலை, திரு.வி.க நகர் முதல் கிண்டி வரை செல்லும் 170சி பேருந்தின் பின் புறம் அமைந்துள்ள விளம்பர பலகையில் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, அரசாங்கத்திற்கு பணம் செலுத்தி விளம்பரம் செய்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ணா மகளிர் கல்லூரியின் விளம்பரத்தை மறைக்கும் விதத்திலும் சென்னை சிவா அவர்களை விளம்பரப் படுத்தும் வகையிலும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் “வள்ளுவரின் புகழை உலகரிய செய்த மறுபிறப்பே” என்ற வாசகத்தோடு “என்றும் தாயகப் பணியில் சென்னை சிவா” என்று மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது போல், சென்னை சிவா அவர்களை திருவள்ளுவருடன் ஒப்பிடுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பேருந்தில் குறைந்த பட்சம் ஒரு முறையாவது பயணித்து அப்பெருந்தில் ஒட்டப்பட்டுள்ள விதிமுறைகளை படித்திருந்தால் (மோ.வா.ச. 1988, பிரிவு 182-A மற்றும் 109ன்) கீழ் போஸ்டர் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்பதையும் உணர்ந்திருப்பர்.
மேலும், 170சி (MVJ 1981) என்ற பேருந்து மாதவரம் பேருந்து நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. பேருந்தின் பின்புறத்திலுள்ள இந்த போஸ்டரை கூட கவனிக்காமல் பேருந்தை இயக்கியிருப்பது அதிகாரிகளின் கவனக் குறைவை சுட்டிக் காட்டியுள்ளது.
பா.ஜ.க வின் இந்த அத்துமீறலுக்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.