பல்டி – திரை விமர்சனம் 3.5/5

ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவுடன் நண்பர்கள் இருவரும் கபாடி வீரர்கள். இவர்கள் குழு அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெறுகின்றனர். செல்வராகவன் குழுவினர் தோற்று வருகின்றனர். ஆகையால், ஷேன் நிகம், சாந்தனுவை அழைத்து என்னுடைய குழுவாக நீங்கள் விளையாடி கபாடி போட்டியில் வெற்றிபெற்றால், 3 மடங்கு பணம் தருகிறேன் என்று கூறுகிறார். ஏழ்மையில் நிலையில் இருப்பதால் ஒப்புக் கொண்டு விளையாடி வெற்றி பெறுகின்றனர். செல்வராகவன் மீட்டர் வட்டி, ஜம்போ வட்டி என்ற பெயரில் கொடுத்த கடனை அடியாட்கள் வைத்து அநியாயமாக வசூல் செய்கிறார். ஷேன் நிகமும், சாந்தனுவும் நண்பர்களுடன் கபாடியில் ஏதாவது பிரச்னை என்றால் அடிதடியிலும் இறங்குகிறார்கள். இதைப் பார்த்ததும் செல்வராகவன் பணத்தாசைக் காட்டி தனக்கு அடியாட்களாக மாற்றுகிறார். அதே ஊரில் செல்வராகவனுக்கு நிகராக அல்போன்ஸ் புத்திரன் மற்றும் கௌரியும் அநியாய வட்டி வசூல் செய்து வருகிறார்கள். அம்மூவருக்குள் யார் பெரியவன் என்ற  போட்டியும் எழுகிறது. செல்வராகவனுக்கு வங்கி தொடங்க முயற்சியெடுக்கிறார்.

ஒரு கட்டத்தில் செல்வராகவன் ஷேன் நிகம் காதலியின் அண்ணனை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்துகிறார். இதைத் தட்டி கேட்கிறார் ஷேன் நிகம். இந்த நால்வரையும் தீர்த்துக் கட்ட ஆள் அனுப்புகிறார் செல்வராகவன்.

செல்வராகவன் வங்கி ஆரம்பித்தாரா? நால்வரும் என்ன ஆனார்கள்? அவர்களின் கபாடி கனவு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஷேன் நிகம் அழகான ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருகிறார். தப்பு என்று மனதில் பட்டால் யாராக இருந்தாலும் பயப்படாமல் எதிர்த்து நிற்கும் போது பளிச்சிடுகிறார். காதலிக்கு ஆபத்து வரும் போதும் சரி, நண்பர்களுக்கு ஆபத்து வரும் போது தீயென பொங்கி எழும் போதும் சரி நடிப்பில் தனக்கென தனி இடம் பிடிக்கிறார்.

சாந்தனுவிற்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். கபாடி வீரர், கடனை வசூல் செய்பவர், அடியாள் என்று அடுத்தடுத்து காட்சிகளின் அடிப்படையில் மாறும்போது யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பதற்கு வாய்ப்பு இருந்து நல்ல கதாபாத்திரம் அமைந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன் என்று சாந்தனு கூறுகிறார்.

செல்வராகவன் தான் மாஸ்டர் பீஸ். ஆயிரக்கணக்கில் கடன் கொடுத்து லட்சக்கணக்கில் வட்டி வசூல் செய்யும் மன்னனாக வலம் வருகிறார். கடன் வாங்கியவர்களை நிர்வாணமாக்கி அவமானப்படுத்தும் போது, முகத்தில் வில்லனுக்கான உணர்ச்சிகளைக் காட்டாமல் அமைதியான நடிப்பால் மிரட்டியிருக்கிறார்.

ப்ரீதி அஸ்ராணி எளிமையாக பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தில் காதல் இருந்தாலும் இயக்குனர் சண்டைக் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளை சேர்த்து கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். இருப்பினும் வித்தியாசமான க்ளைமாக்ஸ் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

இசையும், சண்டைக் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜாலக்காரி பாடல் அசைப் போட வைக்கிறது.

பல்டி – புதிய முயற்சி