கீதா கைலாசத்திற்கு இரண்டு மகன்கள். தொலைபேசி இல்லாத காலகட்டத்தில் கதை பயணிக்கிறது. மூத்த மகனான பரணிக்கு திருமணம் முடிந்து 7 வயதில் மகள் இருக்கிறாள். இவரது மனைவியாக தென்றல் நடித்திருக்கிறார்.
2வது மகனான சரண் சக்தியை கஷ்டப்பட்டு உழைத்து டாக்டராக்கி விடுகிறார் கீதா கைலாசம். ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பால் கொடுப்பதோடு இல்லாமல், ஊரில் நல்லது கெட்டது என்றால் முதல் ஆளாக நின்று தேவையானவற்றை கீதா கைலாசம் செய்து வருகிறார். அந்த காலத்தில் வயதான பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார்கள். அதே போல் ஒரு சிலர் ஆணுக்கு நிகராக சுருட்டு பிடிப்பார்கள். அவரது தோற்றமும், புடவை கட்டிய விதமும் தலைமுடியை சுருட்டி கட்டிக் கொண்டு கம்பீரமான நடையும் பார்ப்பவர்களுக்கு சிறிது கிலியை ஏற்படுத்தும்.
சரண் நகரத்தில் வேலை பார்த்து வருகிறார். அங்கு முல்லையரசியுடன் காதல் ஏற்படுகிறது. முல்லையரசி நல்ல வசதி படைத்த பெண். இருவருக்குள்ளும் காதல் ஓடிக் கொண்டிருக்க, முல்லையரசியின் வீட்டில் சம்மதம் தெரிவித்து விடுகின்றனர்.
அங்கம்மாவும் சரண், முல்லையரசியின் காதலை ஏற்றுக் கொள்கிறார். ஆனால் சரணோ, தனது அம்மா அங்கம்மாவிடம் முல்லை வீட்டினர் வசதி படைத்தவர்கள். அவர்கள் முன்னாள் இப்படி இருக்காதே, சட்டை அணிந்து கொண்டு, அடக்கமாக பேசு” என்று கூறுகிறார்.
முதலில் ஏற்க மறுத்தாலும் தனது மகனுக்காக அதனை ஏற்றுக் கொள்கிறார். ஊரில் அனைவரும் அங்கம்மாளிடம் சகஜமாக பேசினாலும் சிலர் கேலியும் செய்கின்றனர்.
இதனால் மனம் உடையும் அங்கம்மாள் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறுகிறார். இதனால், சரணின் திருமணம் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று கீதா கைலாசத்தை தேர்ந்தெடுத்த இயக்குனருக்கு பாராட்டுகள். நடை, உடை, வசனம், உடல் மொழி என எந்த இடத்திலும் கீதாவாக தெரியாமல், அங்கம்மாளாகவே வாழ்ந்திருக்கிறார் கீதா கைலாசம். தனது ஊர் மக்களிடையே திண்ணையில் அமர்ந்து கொண்டு அரட்டை அடிப்பதும், அது 18+ வார்த்தையாக இருந்தாலும், அதில் எந்த ஒரு ஆபாசமில்லாத வெள்ளந்தி பேச்சும் நம்மை கிராமத்துக்குள்ளே அழைத்துச் செல்கிறார் கீதா கைலாசம்.
பேத்தி மீது வைத்திருக்கும் பாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்தும் விதம் , உச்சானி பூவிற்காக காத்திருப்பது, வயது முதிர்ந்த காதல் என படத்தில் கொள்ளை அழகு கொட்டிக் கிடக்கிறது.
பம்பு செட் மேலே அமர்ந்து இரவு நேரத்தில் சில்லென அடிக்கும் காற்றில் நாதஸ்வரம் கற்றுக் கொள்ளும் பரணி, மாமியாராக தன்னை காயப்படுத்தினாலும் இது நம்ம குடும்பம் என்று எண்ணம் கொண்டு வரும் கதாபாத்திரமான மருமகள் தென்றல், கருமேக அழகாக காட்சிகளில் அழகு தேவதையாக காட்சி தரும் முல்லையரசி, என்ன சொன்னாலும் எந்த இடத்திலும் பாசத்தை குறைவில்லாமல் கொடுக்கும் மகன் சரண் என்று படம் முழுவதுமே ஒரு வாழ்வியலாக தெரிந்தது படத்திற்கு மிகப்பெரும் பலம்.
அங்கம்மாள், மகன் பரணி மற்றும் சரண், மருமகள் தென்றல் என நால்வருக்கும் வீட்டிற்குள் நடக்கும் உரையாடல் படத்திற்கு மிகப்பெரும் மையமாக அமைந்திருக்கிறது.
அவ்வப்போது சிரிப்பு, சின்ன சின்ன காமெடி என படத்திற்குள் நம்மை அழகாகவே இழுத்துச் சென்றிருக்கிறார் இயக்குனர். உச்சிமலை காத்து வீசி உச்சானி பூ வரும் என்ற பாடலோடு படம் முடியும் போது நம்மையும் இந்த படம் சிலிர்க்க வைத்துவிடுகிறது.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். பரணியை இரவு நேரத்தில் காட்டும் போது வைக்கப்பட்ட ப்ரேம், வீட்டிற்குள் நடந்த சண்டையை காட்சிப்படுத்திய விதம், சுழன்று அடிக்கும் காற்றை படமாக்கிய விதம் என பல காட்சிகளை ஒளிப்பதிவாளரின் திறமையை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணிக்க வைக்கிறது.
உச்சிமலை காத்து உச்சானி பூ வரும் பாடல் வரும் க்ளைமாக்ஸில் நம் உடல் ஒரு நிமிடம் சிலிர்க்கிறது. இதுவே படத்தின் வெற்றி.
இயக்கம்: விபின் ராதாகிருஷ்ணன்
நடிகர்கள்: கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநந்தன், யாஷ்மின், சுதாகர், வினோத் ஆனந்த்,
தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் & NJOY FILMS & FIRO MOVIE STATION
ஒளிப்பதிவு:ANJOY SAMUEL
இசை: MOHAMMED MAQBOOL MANSOOR
கதை: பெருமாள் முருகன்
படத்தொகுப்பு: PRADEEP SHANKAR
அங்கம்மாள் – அழகி….

