புதிய கலைநயத்துடனும், கதை களத்துடனும் யூடியூபின் மூலம் மக்களை கவர்ந்து ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ள நக்கலைட்ஸ் குழுவின் அம்முச்சி – 2 தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அம்முச்சி சீசன் 1 யூடியூப் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது அதன் சீசன் 2 வெளியாகியுள்ளது.
இந்த கொங்கு மண்டல குழு தொடர்ச்சியாக இந்த படைப்பிலும் அசத்தி இருப்பதுடன் யூடியூப் நேர்த்தியை தாண்டி திரைப்பட நேர்த்தியையும் கொண்டிருப்பது நல்ல வளர்ச்சி.
இத்தொடரின் கதையானது, கோடாங்கி பாளையத்திலிருக்கும் அருணின் காதலி அவரின் பெற்றோர் சரியில்லாத காரணத்தால், எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாமல் போகிறது.
இதை தெரிந்து கொண்ட அருண், தன் அம்மாவிடம் கோவா செல்வதாக பொய் பேசிவிட்டு கோடாங்கி பாளையம் செல்கிறார். பின்னர், தனது காதலி வீட்டிற்கு சென்று அவளின் படிப்பை பற்றி பேச ஆத்திரம் அடைந்த காதலியின் தந்தை அப்பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார்.
அப்போது அருணுக்கு மாப்பிள்ளை கதாபாத்திரமான மசனாய் மணிக்கும் இடையே நடக்கும் போட்டி தான் அம்முச்சி -2.
அருணின் கேரக்டர் தமிழுக்குப் புதிதாகவே இருக்கிறது. அம்முச்சி சின்னமணி, மாகாளியாக வரும் சந்திரகுமார், வில்லன் மசநாய் மணியாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் எல்லோருமே மிக நேர்த்தியான நடிகர்களாகப் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
இந்த தொடரின் நாயகன் பிரசன்னா பாலச்சந்திரன்தான் என்று கூட சொல்லலாம் அவ்வளவு பிரமாதமான நடிப்பு.
பஞ்சாயத்து அடிதடி பிரச்சனை என அனைத்து விவகாரங்களில் யார் என்ன பேச வேண்டும், என்ன செய்ய வேண்டுமென்பதை சரியான திட்டமிடுதலுடன் இக்கதையை உருவாக்கியுள்ளனர் நக்கலைட்ஸ் குழுவினர்.
அதில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமார் திறமை பளிச்சிடுகிறது. விவேக் சரோவின் இசையும் காட்சியின் வலியையும், இயல்பையும் உணர்த்தவும் விதமாக அமைந்துள்ளது.
பெண்கல்வியை முன்னிலை படுத்தும் வகையில் சமூக பொறுப்புடன் இக்கதையை அமைத்தது பாராட்டத்தக்க செயல் என்றே சொல்லலாம்.
அம்முச்சி 2 – நகைச்சுவையும் பெண் கல்விக்கான விழிப்புணர்வும்