மே மாத இறுதி வரையிலும் சர்வதேச விமான சேவைகள் ரத்து… ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு..!
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தையொட்டி இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மே மாதம் 3 ம் தேதி ஊரடங்கு முடியக்கூடிய நிலையில் அதன் பின்னர் விமான சேவை தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது சர்வதேச விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மே 31 ம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக இன்று (ஏப்ரல் 18,2020) ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உலகளாவிய கொரோனா வைரஸின் தாக்கத்தையொட்டி, உள்நாட்டு விமான சேவை மே 3 ம் தேதி வரையிலும், சர்வதேச விமான சேவை மே 31 ம் தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
எனினும், “மே 4 ம் தேதி முதலான குறிப்பிட்ட உள்நாட்டு விமான சேவைகளுக்கும், ஜூன் 1 ஆம் தேதி முதலான சர்வதேச விமான சேவைகளுக்கும் முன்பதிவு செய்து கொள்ளலாம்” எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிற்கான டிக்கெட் முன்பதிவு ஜூன் 1 ம் தேதியில் இருந்து தொடங்கும் என அறிவித்த விமான நிறுவனம், இந்த முடிவானது தொடர்ந்து மதிப்பாய்வு செய்து புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.