அரக்கோணம் அதிமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டத்தின் பின்னணி எம்.எல்.ஏ.,வுக்கு வந்த “தோல்வி பயம்” காரணமா?
அரக்கோணம் தொகுதியில் உள்ள அதிமுக வக்கீல்களை தனது பிறந்த நாளை முன்னிட்டு திடீரென அழைத்து ஆலோசனை கூட்டம் போட்டார் எம்.எல்.ஏ.சு.ரவி.
அரக்கோணம் தொகுதியில் 2 முறை தொடர்ச்சியாக ரவி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற போதிலும் ஒரு முறைகூட இப்படி தொகுதி வக்கீல்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியதில்லை . இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தின் பின்னணியில் வரும் தேர்தலில் தனது செல்வாக்கு கண்டிப்பாக செல்லாக்காசாக போய்விடும் என்ற அச்சமும், கடந்த முறை போல இல்லாமல் எதிர்க் கட்சியான திமுக சார்பில் வக்கீல் எழில் இனியன் என்பவரை வேட்பாளராக களம் இறக்க அந்த கட்சி முடிவு செய்துதிருப்பதாக வெளியாகும் தகவல்களால் பதட்டம் அடைந்த எம்.எல்.ஏ.ரவி திடீரென வக்கீல்கள் உதவியை நாடியிருக்கிறார் என்கிறார்கள் விவரம் அறிந்த தொகுதிவாசிகள்.
எம்.எல்.ஏ.ரவியும் ஒரு வக்கீல்தான். கடந்த 2 முறையும் எதிர்த்து போட்டியிட்டவர்களின் பலவீனம் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல “தனி அரவணைப்பு” நடத்தி தொடர் வெற்றிகளை பெற்றிருக்கிறாராம்.
அதோடு, ஜெ., முதல்வராக இருந்த கால கட்டத்தை விட எடப்பாடி முதல்வரான இந்த 4 ஆண்டு காலத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியின் “அசுர வளர்ச்சி” அமைச்சர்களை மிஞ்சியுள்ளதாம்.
இதை தெரிந்து கொண்டதால் தான் திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் அரக்கோணம் எம்.எல்.ஏ.ரவியை வெளுத்து வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு, ஆளும் கட்சியின் ஆதரவு, கரன்சி செல்வாக்குடன் அசுர பலத்தோடு களம் இறங்க தயாராகியுள்ள வக்கீல் ரவியை தோற்கடித்து அரக்கோணத்தை மீண்டும் திமுக கோட்டை ஆக்க திமுகவும் ஒரு வக்கீலை களம் இறக்க தீர்மானித்து உள்ளது. இதற்காக அரக்கோணம் தொகுதி முழுதும் ஏராளமான திமுக வக்கீல்கள் ஒரு படையாக களம் இறங்கி சத்தமில்லாமல் பணியாற்றி வருகிறார்கள்.
அதன் விளைவாக அதிமுக எம்.எல்.ஏ.ரவிக்கு மிக நெருக்கமாக வலது கரமாக செயல்பட்ட பிரபல வக்கீல் லோகாபிராம் திடீரென திமுக மாவட்ட செயலாளர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இந்த சம்பவம் எம்.எல்.ஏ.ரவிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருக்காதா… கடந்த 2 தேர்தல்களிலும் ரவி வெற்றிக்கு பெரும் பக்க பலமாக செயல்பட்டவர் இந்த வக்கீல் லோகாபிராமாம். அதோடு, இவர் அரக்கோணம் பகுதியின் அரசு வக்கீலாகவும் இருக்கிறார்.
ஒரு அரசு வக்கீல் திடீரென கட்சி மாறியிருப்பதால்தான் ரவி பதட்டம் அதிகரித்து உள்ளது.
அதோடு தொகுதியிலும் ரவிக்கு பொதுமக்கள் மத்தியிலும், அவர் சார்ந்த ஆளும் கட்சியிலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இதை எல்லாம் தெரிந்து கொண்ட பின்னர் திடீரென அரக்கோணம் தொகுதி அதிமுக வக்கீல்களை அழைத்து ரவி எம்.எல்.ஏ. ஆலோசனை கூட்டம் போட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்திலும் “வெயிட்” ஆன கவனிப்பு இருந்ததாம்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ. ரவிக்கு தோல்வி பயம் வந்து விட்டதோ…