கமல்ஹாசனின் பகுத்தறிவை துணைக் கொள்வேன் – நடிகர் கார்த்திக் ராஜா பேட்டி
வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ராஜா, தமிழ் சினிமாத் துறைக்கு வந்தது பற்றி சுறுசுறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் இளஞ்சூரியன் இணைய தளத்திற்கு அளித்த பேட்டி வருமாறு:-
உங்களைப் பற்றி?
என் பெயர் கார்த்திக் ராஜா. சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர். அப்பா ஓட்டுனர். அம்மா இல்லத்தரசி. உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.
சினிமாத் துறைக்கு வந்ததைப் பற்றி?
சிறுவயது முதலே கமலஹாசனை மிகவும் பிடிக்கும். அவர் படங்களை பார்ப்பதோட அல்லாமல் என்ன மாதிரி விஷயங்களைக் காட்சிப்படுத்துகிறார் என்பதையும் கூர்மையாக கவனிப்பேன். ஒவ்வொரு படத்திலும் அந்தந்த காலகட்டங்களில் நடக்கும் அரசியலையும், மற்ற விஷயங்களையும் பகுத்தறிவோடு அணுகும் விதமும், திரைப்படங்களில் காட்சிப்படுத்தும் விதமும் எனக்கு வியப்பாக இருந்தது. எனவே அவருடைய பகுத்தறிவின் துணைகொண்டு என்னுடைய பாணியில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணினேன். உடனே சென்னைக்கு கிளம்பி வந்தேன் ‘இனிய உளவாக’ என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்தேன். இப்போது திரைப் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறேன்.
இயக்குநராக வரவேண்டும் என்று இருந்தவர் நடிகர் ஆனது எப்படி?
நடிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தது இல்லை. ஆனால், வாய்ப்பு தானாக வரும் போது அதைப் பயன்படுத்திக் கொண்டேன். ‘மாயவன்’ ‘மாநகரம்’ இரண்டு படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். ‘மாயநதி’ படத்தில் சரவணன் மற்றும் அப்புகுட்டி இருவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். இந்தப் படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
‘மாயநதி’ க்கு பிறகு நடிப்பா? இயக்கமா?
நடிப்பா? இயக்கமா? என்ற கேள்விக்கு, இயங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு நடிப்பு தேவை நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இயக்கம் தேவை. அது என்னவென்று நான் ஒரு இயக்குனராகவோ, நடிகனாகவோ வெற்றி பெறும்போது எல்லோருக்கும் புரியும். ஆனால், நடித்துக் கொண்டே ஒரு கதையை எழுதி வருகிறேன். அதைப்போல யூடியூப் வீடியோவுக்கு உள்ளடக்கங்களை எழுதிகிட்டு இருக்கேன். நான்கைந்து படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இப்போது, ‘கா’ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிச்சிகிட்டு இருக்கேன்.
ஆண்ட்ரியாவுடன் ஜோடியாக நடிக்கிறீர்களா?
ஐயையோ இல்லைங்க (என்று பதட்டமானவர், அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கத்தோடும் பதில் கூறுகிறார்). ஆனால், சின்னக்கவுண்டர் படத்தில் வில்லனாக நடித்த சலீம் கோஷ் இப்போது கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். அவரை எதிர்க்கும் கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இப்படத்தைப் பற்றி அவ்வளவுதாங்க சொல்ல முடியும் என்கிறார்.
– ஹேமா