பிளாக் கோல்டு (BLACK GOLD) – திரை விமர்சனம் 3.5/5

தலைமுடிக்குப் பின்னால் இத்தனை பெரிய வியாபார உலகமா?

தங்கம், வைரம், பெட்ரோலியம் போன்றவற்றைச் சுற்றி நடக்கும் கடத்தல் கதைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் மனிதர்களின் தலைமுடியைக்கூட கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வியாபாரப் பொருளாக மாற்றும் ஒரு உலகத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.

தலைமுடி ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டிருக்கும் தங்கதுரை (ஏ. வெங்கடேஷ்), ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடி சரக்கை லாரி ஓட்டுநர் மாரிமுத்துவிடம் (லிவிங்ஸ்டன்) ஒப்படைக்கிறார். ஆனால் சரக்குடன் மாரிமுத்துவும் காணாமல் போகிறார்.

கார் மெக்கானிக் கடை நடத்தும் அவரது மகன் செல்வா (வெற்றி), தந்தையைத் தேடி களமிறங்குகிறான். இந்தத் தேடல் அவனை தலைமுடி வியாபாரத்தின் பின்னணியில் இயங்கும் குற்ற உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது. தந்தைக்கு என்ன ஆனது? சரக்கு எங்கே போனது? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதுதான் மீதிக்கதை.

செல்வா கதாபாத்திரத்தில் வெற்றி தனது வழக்கமான இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது.

லிவிங்ஸ்டன் ஒரு எளிய குடும்பத் தலைவனாகவும், பாசமுள்ள தந்தையாகவும் மனதில் நிற்கிறார். அவருக்கும் வெற்றிக்குமான காட்சிகள் படத்திற்கு உணர்வுப்பூர்வமான பலம்.

பிரியலயா தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார். ஏ. வெங்கடேஷ் தனது தோற்றத்திற்கும் கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

அபிராமி வெங்கடாசலம், நிழல்கள் ரவி உள்ளிட்ட மற்ற நடிகர்களும் கதையின் போக்கிற்கு உதவியிருக்கிறார்கள்.

இயக்குநர் தீரன் அருண்குமார் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக்களமே படத்தின் மிகப்பெரிய தனித்துவம்.

இந்தியாவில் தலைமுடி ஏற்றுமதி தொழிலுக்குப் பின்னால் இருக்கும் பொருளாதாரத்தையும், அதில் உருவாகும் போட்டி, பேராசை, அதிகாரப் போராட்டங்களையும் கதைக்குள் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்.

கவாஸ்கர் அவினாஷின் பின்னணி இசை சண்டைக் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. சந்தோஷ் குமார் வீரசாமியின் ஒளிப்பதிவு கதையின் சூழலுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. தினேஷ் குமாரின் படத்தொகுப்பில் இன்னும் கூடுதல் நேர்த்தி இருந்திருக்கலாம்.

புதுமையான கதைக்களம் இருந்தும் அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் திரைக்கதை தவறியிருக்கிறது.

தலைமுடி வியாபாரத்தை மையமாகக் கொண்ட கதையில் அந்தத் தொழிலின் பின்னணியையும், அதன் செயல்பாடுகளையும் இன்னும் ஆழமாகக் காட்டியிருக்கலாம்.

கதையில் பல கிளைகள் உருவாகின்றன. ஆனால் அவை அனைத்தும் ஒரே புள்ளியில் இணையும் விதத்தில் வலுவான திரைக்கதை அமைக்கப்படவில்லை. சில இடங்களில் காட்சிகளுக்கு இடையிலான தொடர்பும் குறைவாக இருக்கிறது.

விறுவிறுப்பான கிரைம் திரில்லராக மாற வேண்டிய கதை, சில இடங்களில் வழக்கமான பழிவாங்கும் கதையாக மாறிவிடுகிறது.

மனிதர்களின் தலையில் இருக்கும் தலைமுடி, உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒருவருக்கு விலைமதிப்பற்ற வியாபாரப் பொருளாக இருக்கிறது என்ற வித்தியாசமான சிந்தனையைத் திரைக்குக் கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

ஆனால் தங்கமாக மின்ன வேண்டிய கதைக்கருவை, திரைக்கதையும் அதே அளவுக்கு மெருகேற்றியிருந்தால் ‘பிளாக் கோல்டு’ இன்னும் சிறப்பான படமாக அமைந்திருக்கும்.

தலைமுடியைத் தங்கமாகப் பார்க்க வைத்த இயக்குநர், திரைக்கதையையும் தங்கமாக மின்ன வைத்திருக்கலாமே!