ஃபிளாக் (FLAG) – திரை விமர்சனம் 3.5/5/5

ஃபிளாக் – கொடியைத் தாண்டிய ஒரு தேடல்!

ஒரு நாட்டின் அடையாளமாக இருக்கும் தேசியக் கொடியை மையமாக வைத்து, ஒரு சிறுவனின் பயணத்தின் வழியாக இந்தியாவின் பரந்த நிலப்பரப்பையும், மனிதர்களின் மனங்களையும் பேச முயற்சித்திருக்கிறது ‘ஃபிளாக்’.

தாத்தாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறுவன் மேற்கொள்ளும் பயணம்தான் படத்தின் மையக்கரு. அந்தப் பயணம் வெறும் இடங்களைக் கடந்து செல்வதாக இல்லாமல், பல்வேறு மனிதர்கள், மொழிகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் எனப் பல புதிய அனுபவங்களை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறது.

சிறுவனின் உலகம் மிகவும் சிறியது. ஆனால் அவன் பயணம் செய்யும் இந்தியா மிகப்பெரியது. இந்த முரண்பாட்டை திரையில் கொண்டு வந்திருப்பதுதான் படத்தின் சுவாரஸ்யமான அம்சம்.

மாஸ்டர் தீஹான் தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சிறுவனுக்கே உரிய ஆர்வம், தயக்கம், பிடிவாதம், அப்பாவித்தனம் எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். தாத்தா கதாபாத்திரத்தில் வரும் மிக்கி மக்கிஜா அனுபவமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் எஸ்.பி. பொன்சங்கர் எடுத்துக்கொண்ட கதைக்களம் பாராட்டுக்குரியது. ஒரு தேசியக் கொடியின் பின்னணியில் நாட்டின் ஒற்றுமையைப் பேசுவதோடு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளையும் திரையில் பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவில் பல இடங்கள் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன.

இருப்பினும், சில இடங்களில் திரைக்கதை இயல்பான பயணத்திலிருந்து விலகி நாடகத்தனமாக மாறுகிறது. சில காட்சிகளைச் சுருக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். இசையும் உணர்வுகளுக்கு ஏற்ப இன்னும் அழுத்தமாக அமைந்திருக்கலாம்.

தேசப்பற்று என்றால் முழக்கங்கள் மட்டும்தானா? தேசியக் கொடியை மதிப்பது மட்டும்தானா? நம்முடன் வாழும் வெவ்வேறு மொழி பேசும் மனிதர்களையும், அவர்களது கலாச்சாரத்தையும் மதிப்பதிலும் நாட்டுப்பற்று இருக்கிறது என்பதை நினைவுபடுத்துகிறது இந்தப் படம்.

மொத்தத்தில், பெரியவர்களுக்கான அரசியல் அல்லது அதிரடி தேசப்பற்றுப் படமாக இல்லாமல், குழந்தைகளின் பார்வையில் இந்தியாவை அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாக ‘ஃபிளாக்’ அமைந்திருக்கிறது.

ஒரு கொடியின் மூன்று நிறங்களுக்குப் பின்னால் ஒரு நாட்டின் எண்ணற்ற கதைகள் இருக்கின்றன என்பதை நினைவுபடுத்தும் திரைப்படம்!

இயக்கம்: எஸ்.பி. பொன்சங்கர்

நடிப்பு: மாஸ்டர் தீஹான், மிக்கி மக்கிஜா, கிரி துவாரகேஷ்.

ஃபிளாக் – ஒரு கொடி பல மொழி